Saturday, January 21, 2012

மாமல்லனுக்கு சுஜாதாவின் குஞ்சொன்று கூறும் பதில்


"கல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்" என்ற மாமல்லனின் கருத்தின் மேலிருந்த சந்தேகத்தை அவரிடமே கேட்டுத் தெளிவு பெறலாம் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். கூடவே, சாரு நிவேதிதா தன் வாசகர்களின் தரத்தை உயர்த்துவதற்காக எதுவும் செய்ததில்லை என்ற அவரது குற்றச்சாட்டை மறுத்தும் எழுதியிருந்தேன். எனக்கான பதிலை “விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள்”என்ற தலைப்பில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
 கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் ஆகியோர் பெரிய வாசக வட்டத்தை உருவாக்கி, வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கினார்கள். அதனால்தான் அவர்களை இடைவழிப் பாலமாக இருக்கிறார்கள் என்றேன் என்பது மாமல்லன் கருத்து. தமிழ்வாணன், பி.டி. சாமி, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் இந்த இ.வ.பா குழுமத்தில் சேருவார்களா என்று தெரியவில்லை. எட்டு வயதில் தமிழ்வாணன்; பத்தில் கல்கி; பனிரெண்டில் கையில் கிடைத்த சகலமும்; பதினைந்தில் சுஜாதா, ஜெயகாந்தன், அபூர்வமாகக் கிடைத்த ராஜம் கிருஷ்ணன்; பதினெட்டில் விகடன் மூலமாக கி.ராஜநாராயணன்; இருபத்தி ஆறில் இந்தியா டுடே இலக்கிய மலர் மூலமாக நாஞ்சில் நாடன்; முப்பத்து நான்கில் சென்னைப் புத்தகக் கண்காட்சி வாயிலாக புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன்; அதன் பின்னர் வந்த புத்தகக் கண்காட்சிகள் வழியாக ராஜ் கவுதமன், ஜோ டி க்ரூஸ் சாரு நிவேதிதா; சாரு மூலமாக ப. சிங்காரம், ஜி. நாகராஜன் இந்திரா பார்த்தசாரதி; சுஜாதா வழியாக மனுஷ்யபுத்திரன்; மனுஷ்யபுத்திரன் மூலமாக அ. முத்துலிங்கம்; அ. முத்துலிங்கம் வழியாக பி.ஏ. கிருஷ்ணன்; ஜெயமோகன் மூலமாக கண்மணி குணசேகரன் – இப்படியாக இந்த நாற்பத்து நான்கு வரை விரிந்ததே எனது வாசிப்பனுபவம். வரும் காலங்களில் நகுலனையும், பிரமிளையும் கூட வாசிக்கலாம். சாவதற்கு முன் கோணங்கியைக் கூட வாசிக்க முடியலாம், அல்லது அவரை வாசிக்கும் முயற்சியிலேயே செத்தும் விடலாம், யாருக்குத் தெரியும்?
வாசிப்பதும், எழுதுவதும்; திரைப்படங்களைப் பார்ப்பதும், உருவாக்குவதும்; ஓவியங்களைக்  காண்பதும், தீட்டுவதும், சில அதிர்ஷ்டசாலிகளுக்கே முழு நேரத் தொழிலாக அமைய முடியும். என்னைப் போன்ற பெரும்பாலானவர்களுக்கு வேறு தொழில்கள் அமைந்து விடுகின்றன. கலையைக் கண்டு கொள்வது, ரசிப்பது, அபூர்வமாக படைத்துப் பார்ப்பது இவையனைத்திற்கும் எங்களுக்குக் கிடைக்கும் நேரம் சொற்பமே. கடலளவு இருக்கும் கலைப் படைப்புகளில், புல்லளவே இருக்கும் மானிட வாழ்வில், கடுகளவே காண முடியும் என்பதால்தான் குருநாதர்களும், வழிகாட்டிகளும் தேவைப்படுகிறார்கள். அவர்களில் யார், என்ன செய்தார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
மாமல்லன் சொல்கிறார்: “சுஜாதா சுஜாதா என்கிறீர்களே அவர் அறிமுகப்படுத்தியதெல்லாம் வெகுஜன வாசகர்களுக்கு வித்தியாசமாய் இருப்பதுபோல் தோன்றும் அதே சமயம் ரொம்ப பயமுறுத்தாத வேலியோர வண்ணதாசன்களைத்தான்.
அதில் பெரிய தவறும் இல்லை. அதற்காக, அப்படி அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் ஏதோ பெரும் இலக்கியத் தொண்டாற்றியதைப் போன்ற தொனிதான் சகிக்க முடியவில்லை. மாபெரும் சாதனைகள் புரிந்த இலக்கியவாதிகளையே ‘தொண்டு’ ஆற்றினார் என்று சொல்வது ஏதோ திட்டுவதுபோலத்தான் தோன்றுகிறது. தேனீ தனக்காக சேகரிக்கும் தேனை, சேகரிக்க முடியாமல் இருக்க முடியாததால் சேகரிக்கும் தேனை, தேன் சேகரிப்பு தவிர அதற்கு வேறு ஏதும் தெரியாது என்பதால் அது சேகரிப்பதைத் தொண்டு என்று சொல்ல முடியுமா? தேனின் அற்புதங்கள் அனைத்தையும் அறிந்தேதான் இது சொல்லப்படுகிறது.
கலையின் சிகரங்களுக்கே இதுதானென்கையில், சிறந்த கேளிக்கையாளராய் இருந்த பல தருணங்களில் ஏற்கெனவே எவனெவனோ சேகரித்த ’தேனை’ சொந்த லேபிள் ஒட்டி விநியோகித்த சுஜாதவை இலக்கிய குலதெய்வமாய் இணையத்தில் கொண்டாடுவதை அவரே ஏளனமாய்த்தான் பார்ப்பார் என்பது ஏன் இந்தத் தலைமுறைக்குப் புரிவதில்லை.
இதற்குப் பதிலாக ஒரு பதிவரின் கருத்தை முன்வைக்கிறேன்:
நல்ல படைப்புகள் பற்றிய  அறிமுகங்களில் இரண்டுவகை உண்டு.
“அறிமுகப்படுத்தி உயர் பிம்பம் அடைதல்.
பிரபலம் என்கிற பெரும் பிம்பம் கிடைத்தபின் நல்ல விஷயம் என நாம் நம்புகிறவற்றை பிராபல்யத்தைப் பயன்படுத்தி வெகுஜனங்களிடம் அறிமுகப்படுத்துதல்.
பின்னதன் முற்றமுழுமுதல் உதாரணம் சுஜாதா. அவரது வடிவ பங்களிப்பு போலவே இலக்கிய அறிமுகப் பங்களிப்பும் அபாரமானது. இலக்கியவாதிகளின் பெயர்களை குமுதத்தில் ‘உதிர்த்ததால்’ அவருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏகப்பட்ட இளைஞர்களுக்கு பிரயோஜனம். இன்னும் சொல்லப்போனால் இதில் சுஜாதாவுக்கு நஷ்டம் என்று கூட சொல்லலாம்.
சுஜாதா மூலம் கிடைத்த அறிமுகத்தால் தீவிர இலக்கிய வாசிப்பிற்கு வந்து சுஜாதாவைத் தாண்டிப் போனவர்கள் கனிசமானோர் எனலாம். அதைப் பற்றி அறியாதவர் அல்லர் என்பது மட்டுமின்றி அதைப்பற்றி கவலைப்படாதவராகவும் அவர் இருந்தார்.”
மேற்கண்ட பதிவை எழுதியதும் மாமல்லனே. ஆக, சுஜாதா இலக்கியத் தொண்டாற்றினார், தேநீர் ஆற்றினார் என்றெல்லாம் குஞ்சுகள் சொல்வது இருக்கட்டும். பெரிசே அதைத்தானே சொல்லியிருக்கிறது.  ஆனால், 20.10.2010ல் அபாரமான இலக்கிய அறிமுகப் பங்களிப்பு செய்த சுஜாதா, 20.01.2012ல் வேலியோரம் லேபிள் ஒட்டப் போய் விடுவதன் மர்மம்தான் புரியவில்லை. ஒரு வேளை இணைய இலக்கிய மும்மூர்த்திகள் மேலிருக்கும் கடுப்புதான் சுஜாதா மேல் பொசிகிறதோ, என்னவோ.
எழுத்தாளப் பெரிசுகள் நாக்கைப் புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொள்ளட்டும். சுஜாதாவே எழுதியிருக்கிறார்: க.நா.சு எப்படி டில்லியில் முகத்தைத் திருப்பிக் கொண்டார்; சுரா நாகர்கோவிலில் எப்படிப் புறக்கணித்தார் என்று. இந்தப் பெரிசுகளிடம் இருந்த/இருக்கும் பொறாமையோ, காழ்ப்புணர்ச்சியோ, வியாபாரத் தந்திரங்களோ கிடையாது வாசகக் குஞ்சுகளுக்கு. தான் கண்டுபிடித்த எழுத்தாளர்களையும், படைப்புகளையும் – அது Bill Bryson-ஆக இருக்கலாம்; ஜெமினி ஸ்டுடியோ காண்டீன் சமையற்காராக இருக்கலாம் – அறிமுகம் செய்து வைத்த சுஜாதாவின் நோக்கங்களிலும், எழுத்துக்களிலும் இந்தக் குஞ்சுகள் ஒரு குழந்தையின் தேடலையும், தேடியதை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டு, பிற படைப்பாளிகளை மனதார பாராட்டும் பண்பையும் கண்டார்கள். அதனால்தான் சுஜாதாவை ஒரு தலைமுறையே தன் காலம் முழுவதும் போற்றிக் கொண்டிருக்கிறது. 
இனிமேல் மும்மூர்த்திகளின் அறிமுகப் பங்களிப்பையும் பார்த்து விடலாம்.
பைபிளில் பவுல் இப்படியாக எழுதுகிறார்:
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
நமது மும்மூர்த்திகள் உயர் பிம்பம் அடைவதற்காக அறிமுகம் செய்திருக்கலாம். “உன் முதுகை நான் சொறிகிறேன், என் முதுகை நீ சொறி” என்று திட்டம் தீட்டி அறிமுகம் செய்திருக்கலாம். இன்னொருவரைப் புறக்கணிக்கின்ற அரசியல் முயற்சியாக மற்றொருவரை அறிமுகம் செய்திருக்கலாம். படைப்பை வாசிக்காமலேயே, இணையத்தில் டௌன்லோடு செய்து எழுதியிருக்கலாம். உள்ளீடற்ற, சொந்த அனுபவமற்ற அறிமுகங்களைச் செய்திருக்கலாம். சுயபுராணம் பாடுவதற்காக அறிமுகம் செய்திருக்கலாம். உண்மையாகவே ஒரு படைப்பாளியாலோ, படைப்பாலோ கவரப்பட்டு அறிமுகம் செய்திருக்கலாம். எப்படியானால் என்ன? இவர்கள் மூலமாக படைப்புகளும், படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.
எஸ். ராமகிருஷ்ணனின் சிந்தனையும், புனைவும் எனக்கு உவப்பளிக்காததால், அவரை நான் அதிகமாகப் படிப்பதில்லை.  ஆனால், சாரு நிவேதிதாவையும், ஜெயமோகனையும் இணையத்திலும், பதிப்பிலும் படித்து வருகிறேன். இருவரின் படைப்புகள் மீதும், இயங்குமுறைகள் மீதும் எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. ஆனால், இருவரும் கணிசமான அளவில் படைப்புகளையும், படைப்பாளிகளையும் அறிமுகம் செய்து வைப்பவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. சாரு நிவேதிதா ஒரு காலத்தில் இந்த அறிமுகங்களைத் தீவிரமாக செய்து கொண்டிருந்தார். நபக்கோவ், யோசா, காபிரியல் கார்சியா மார்க்வெஸ், ப. சிங்காரம் என்று அவர் எழுதியதால் தமிழ் வாசகப் பரப்பிற்கு பரிட்சயமான எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஜெயமோகன் மூலமாக எனக்குத் தெரிய வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வைக்கம் மொகமது பஷீர்,
பால் சக்கரியா, கண்மணி குணசேகரன் முதலியோர். விஷ்ணுபுரம் வாசக வட்ட விருது மூலம் தெரிய வந்த அ. மாதவனை இன்னும் படிக்கவில்லை. ஆனால், ஆர்வமாக இருக்கிறேன்.
இந்த அறிமுகங்களெல்லாம் வாசகன் முதுகில் சுமையை ஏற்றுகின்றன; அவன் கண்களை குருடாக்குகின்றன; தங்களை முன்னிருத்தி இலக்கியத்தைப் பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதெல்லாம் மாமல்லனின் வரட்டு வாதமாகத்தான் படுகிறது. சாருவோ, ஜெயமோகனோ, ஏன் சுஜாதாவே கூட அறிமுகப்படுத்தினார் என்பதற்காகவே ஒரு படைப்பு மேன்மையடைவதுமில்லை; இவர்கள் அறிமுகப்படுத்தாதவை என்பதனால் மட்டுமே தோல்வியடைவதுமில்லை. இன்றைக்கு சாருவும், ஜெயமோகனும் உயர்வாகப் பேசும் எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகள் தனிப்பட்ட வகையில் எனக்கு ஏமாற்றமளிக்கும் படைப்புகளே.
“புல்லுக்குப் பொசிகிறதே” என்று எந்த விவசாயியும் கவலைப்படுவதில்லை. இயற்கையின் நியதி அதுதான் என்பது அவனுக்குத் தெரியும். நெல்லுக்கு நீர் போய்ச் சேருகிறதா என்பதில்தான் அவன் கவனம் இருக்கும். ஆனால் “புல்லுக்குப் பொசிகிறதே” என்ற பொருமலிலேயே மாமல்லனின் காலம் விரையமாவதாகத் தோன்றுகிறது. தி. ஜானகிராமனுடன் சாரு நிவேதிதா பேசியிருப்பாரா போன்ற புலனாய்வுகளில் புளங்காகிதம் எய்துவதை விட்டு விட்டு “எக்ஸைல்” நாவலுக்கு எழுதியது போன்று சாரமான விமர்சனங்களை அவர் தொடர்ந்து எழுதினால் என்னைப் போன்ற குஞ்சுகளுக்கு உபகாரமாக இருக்கும்.                 

8 comments:

Annamalai Swamy said...

உங்கள் கருத்தை அழகாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே! இன்று எழுதி கொண்டிருக்கும் பல பதிவர்களை/எழுத்தாளர்களை எதாவது ஒரு விதத்தில் சுஜாதா பாதித்திருப்பார்.

ராம்ஜி_யாஹூ said...

உங்களின் ஆழமான இணைய வாசிப்பு தெரிகிறது

இதையேதான் முன்பு ஜெயமோகன் தளத்திலும் சொன்னோம்

ஐ ஐ எம் அஹமதாபாதில் படித்து முடித்ததும்
ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு அறிவு கம்மி
அவரை ஏன் தொண்டாற்றியவர் போல போற்றுகிறீர்கள்,

ஐ ஐ எம் முடித்தாயிற்றே, ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு எதற்கு இன்னமும் மரியாதை தர வேண்டும்
ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் பணி கற்றுக் கொடுப்பதுதானே, அதற்காக எதற்கு போற்ற வேண்டும் .

உயரம் போனதும் ஏறி வந்த ஏணியை மற என்று இலக்கியவாதி மாமல்லன் நமக்கு பண்பான பாடம் கற்றுத் தருகிறார்

Rathnavel Natarajan said...

வாசகக் குஞ்சுகளுக்கு. தான் கண்டுபிடித்த எழுத்தாளர்களையும், படைப்புகளையும் – அது Bill Bryson-ஆக இருக்கலாம்; ஜெமினி ஸ்டுடியோ காண்டீன் சமையற்காராக இருக்கலாம் – அறிமுகம் செய்து வைத்த சுஜாதாவின் நோக்கங்களிலும், எழுத்துக்களிலும் இந்தக் குஞ்சுகள் ஒரு குழந்தையின் தேடலையும், தேடியதை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டு, பிற படைப்பாளிகளை மனதார பாராட்டும் பண்பையும் கண்டார்கள். அதனால்தான் சுஜாதாவை ஒரு தலைமுறையே தன் காலம் முழுவதும் போற்றிக் கொண்டிருக்கிறது.

அருமையான பதிவு. வாழ்த்துகள்.

Victor Suresh said...

மாமல்லனின் பதில் பதிவு: http://www.maamallan.com/2012/01/blog-post_22.html

Victor Suresh said...

பதிலாக நான் கூகிள் ப்ளஸ்ஸில் அளித்த பின்னூட்டம்:
நாங்கள் குஞ்சுகள்தானே. வார்த்தைகளையும் வாக்கியங்களையும் இப்போதுதான் நன்றாகப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். ‘தொனி’யை வாசிக்கும் வித்தையை உங்களைப் போன்ற பெரிசுகளிடம் இருந்து இனிமேல்தான் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் 20.10.2010ல் எழுதியதும், 20.01.2012ல் எழுதியதும் ஒன்றுதான் என்ற விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுக்கும் இடையில் கோணங்கியைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உஸ்..ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.

நெல்லை கபே said...

ஒரேடியாக திட்டுவது அல்லது ஒரேயடியாக புகழ்வது என்பது இலக்கியவாதிகளின் வியாதியாகிவிட்டது.

என் வலையில்;

அம்மோனியம் பாஸ்ஃபேட் - சுஜாதாவின் த்ரில்லர் சிறுகதை

வில்லவன் கோதை said...

பதற்றமின்றி உங்கள் கருத்துக்களை எடுத்து வையுங்கள்.
பாண்டியன்ஜி வேர்கள்

Anonymous said...

Superb. Neatly replied to his post. Maamallan can utilise his energy and time in creating something new than wasting it in abusing Jemo etc..

Sivan