Sunday, February 26, 2012

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்: சில நினைவுகள் (2)


முதல் பகுதி இங்கு.
“பார்ப்பன அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு” என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். பார்க்க முடியாத ஒன்றுதான் எனது முதல் கட்டுரையாக உருவாகியது. அந்தக் காலத்தில் தென் தமிழக மாவட்டங்களில் இலங்கையின் அரசு நிறுவனமான ரூபவாகினியின் தொலைக்காட்சி சேவை மட்டுமே கிடைத்து வந்தது. தூத்துக்குடி போன்ற கடலோர நகர்களில் பெரும்பாலான நேரங்களில் இச்சேவை நன்றாக இருக்கும். படம் தெளிவாகத் தெரியும். சில நேரங்களில் ஒன்றுமே தெரியாது. புரியாத சிங்கள மொழிச் சேவை தெளிவாகத் தெரிவதாகவும், விரும்பிப் பார்க்கும் தமிழ், மற்றும் ஆங்கில மொழிச் சேவைகள் தெளிவாகத் தெரியாததாகவும் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியாவின் கை ஓங்க, ஓங்க, படம் தெளிவு குறைந்து கொண்டே போய், ஒன்றும் தெரியாமலாகிவிட்ட கடுப்பில் “ட்ரான்ஸ்மிட்டரின் சக்தியைக் கூட்டியும் குறைத்தும் நம் உணர்வுகளுடன் விளையாடுகிறது ரூபவாகினி” என்று ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது  அடுத்த வாரம் ‘ரூபவாகினியின் கோர தாண்டவம்’ என்ற தலைப்பில் மதன் அவர்களின் கார்ட்டூனுடன் ஒருபக்கக் கட்டுரையாக பிரசுரமானது. யாரிடமும் எந்த ஒரு அபிப்பிராயமும் கேட்காமல், வெறும் அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை பிரசுரமானது அந்தக் காலத்திலேயே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உண்மையை விட உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய சுவாரஸ்யத்திற்கே தமிழகப் புலனாய்வுப் பத்திரிகைகள் அன்றும், இன்றும் முதலிடம் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் ஜூனியர் விகடன் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் சென்று திரும்பியதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் அவர் விமான நிலையத்திற்குத் திரும்பும் வழியில் திருச்சி சிறைச்சாலையைக் கண் கொட்டாமல் பார்த்து வந்ததாகவும், காரணம் அந்தச் சிறைக்குள்தான் அவரது முன்னாள் தோழியின் உறவினர் அடைக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது. முதல்வரின் வாகன ஓட்டியோ, அல்லது வாகனத்தில் பயணித்த வேறு யாராவதோ சொல்லியிருந்தாலொழிய அவர் அப்படி சிறைச்சாலையைக் கண்கொட்டாமல் பார்த்தாரா இல்லையா என்று தெரியாது. அப்படி முதல்வரின் வாகன ஓட்டியோ, அல்லது வாகனத்தில் பயணத்தில் வேறு யாரோ விகடன் நிருபரிடம் சொல்லக் கூடிய வாய்ப்புகள் குறைவு. எனவே, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் சிறைச்சாலை இருக்கிறது, உள்ளே முன்னாள் தோழியின் உறவினர் இருக்கிறார் என்ற இரண்டு உண்மைகளுக்கு நடுவில் அனுமானத்தின் அடிப்படையில் யாரும் ஒத்துக் கொள்ளவோ, மறுக்கவோ முன்வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் ஒரு உடான்ஸை செருகியிருக்கிறார் பத்திரிகையாளர்.
‘ரூபவாகினியின் கோர தாண்டவம்’ பிரசுரமான சமயத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. எம். வசீகரன் என்பவர் நான் மாணவ நிருபராகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து, என்னை வந்து சந்திக்கும் விருப்பத்தை சொல்லியிருந்தார். அவரும், அவரது நண்பர் கண்ணனும் ஒரு நாள் என்னை வந்து சந்தித்தார்கள். வசீகரன் என்னை விடச் சில ஆண்டுகள் மூத்தவர். கருப்புச் சட்டை அணிந்திருந்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் பகுதிநேரப் பணியும், புகைப்படக் கலைஞராக பகுதிநேரப் பணியும் செய்து கொண்டிருந்தார். திராவிட கழகத்திலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். பத்திரிகைப் பணியில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரிடம் ஸ்கூட்டரும், கேமராவும் இருந்தன. என்னிடம் பத்திரிகையாளன் என்ற அங்கீகார அட்டையும், பேனாவும், காகிதமும் இருந்தன. இருவருக்கும் பத்திரிகைத் துறையில் ஆர்வம் இருந்தது. எனவே, கூட்டணி சேர்ந்து விட்டோம். அன்று முதல் பாரதிராஜா படப்பிடிப்புகளுக்கு கண்ணனின் கண்களை எடுத்துச் செல்வது போல எனது பத்திரிகைப் பணிகளுக்கெல்லாம் வசீகரனின் கண்களைத்தான் எடுத்துச் சென்றேன். என்னை அவரது ஸ்கூட்டர் சுமந்து சென்றது.
தமிழகத்தின் புகழ்பெற்ற வைணவத் தலமான தென்திருப்பேரை கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்ற செய்தி கேள்விப்பட்டு நானும், வசீகரனும் தென்திருப்பேரைக்கு விரைந்தோம். ஏற்கனவே திருச்செந்தூர் கோவிலில் செந்திலாண்டவனுக்கு சாத்தப்பட்ட வைர வேலொன்றை அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு பிரமுகர் அபேஸ் செய்ததாகவும், அதைத் தட்டிக் கேட்ட சுப்பிரமணிய பிள்ளை என்னும் ஆலய அதிகாரியைக் கொன்று விட்டு, உண்டியலில் விழுந்த பணத்தை அவர் திருடி, கையும், களவுமாக பிடிபட்டு, அவர் அவமானத்தால் தூக்கிலிட்டு இறந்து விட்டதாக கதை கட்டியதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. கருணாநிதி இந்த சம்பவத்தை முன்னிட்டு “நீதி கேட்டு நெடும்பயணம்” என்ற பெயரில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரை நடைப் பயணமாக வந்து தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். தென்திருப்பேரை கொள்ளையிலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியதால், இக் கொள்ளைக்கு அரசியல் முக்கியத்துவமும் சேர்ந்திருந்தது.
நானும், வசீகரனும் கொள்ளைச் செய்தியை சராசரி ஜூனியர் விகடன் பாணியிலேயே மேற்கொண்டோம். சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வது. புகைப்படங்கள் எடுப்பது. கோவில் நிர்வாகிகளுடன் பேட்டி. கோவில் தெருவில் வசிப்பவர்களுடன் பேட்டி. புலனாய்வு செய்யும் அதிகாரிகளுடன் பேட்டி. இவற்றின் அடிப்படையில் ஒரு கட்டுரை. நமக்கு என்ன தோன்றுகிறதோ அதன் அடிப்படையில், கூடவே ஏதாவது நீதியைச் சொல்லி கொளகொளா என்று முடிவுரை.   
அடுத்த வாரம் தென்திருப்பேரை கோவில் கொள்ளை பற்றிய கட்டுரை ஜூனியர் விகடனில் வந்தது. அது நானெழுதிய கட்டுரை மாதிரியும் இருந்தது; இல்லாமலிருந்தது போலவும் இருந்தது. அப்போதெல்லாம் கையினால் கட்டுரை எழுதி, பிரதி எடுத்து வைக்காமல் அனுப்புவதால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. ஆனால், கட்டுரையில் பிரசுரமான புகைப்படம் வசீகரன் எடுத்தது. அவர் பெயர் பிரசுரமாகவில்லை. கட்டுரையின் ஆசிரியர் ‘நமது நிருபர்’. பிறகு விசாரித்ததில் தெரிய வந்தது விகடனின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சுதாங்கனுக்கு சொந்த ஊர் தென்திருப்பேரையாம். அவரும் சென்னையிலிருந்து ஊருக்குப் போய் செய்தி திரட்டி அனுப்பியிருக்கிறார். எனவே, கட்டுரையாளர்களின் பெயர் குறிப்பிடப்படாமலே கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.
வீட்டில் இருந்து டி.வி. பார்த்து விட்டு, அனுமானத்தின் அடிப்படையில் ஏதோ ஒன்றை எழுதினால் பிரசுரமாகிறது. விடுமுறை எடுத்துக் கொண்டு, நாள் பூராவும் திரிந்து செய்தி சேகரித்து அனுப்பினால், அது நம் பெயரில் பிரசுரமாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை உணர்ந்த போது உற்சாகம் வடிய ஆரம்பித்தது. இந்த அனுபவம் ஒரு முறை மட்டுமல்ல. மீண்டும், மீண்டும் தொடர்ந்தது.                   
(இன்ஷால்லா தொடர்வேன்)

Sunday, February 12, 2012

கொத்தவரை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா?


Food Chemistry என்ற அறிவியல் பத்திரிகையில் வரவிருக்கும் சில கட்டுரைகளைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது கவனத்தை ஈர்த்தது மைசூர் மத்திய உணவு ஆய்வு நிறுவனத்திலிருந்து சுப்ரா பாண்டே, கிருஷ்ணப்புரா ஸ்ரீனிவாசன் என்ற இரு அறிவியலாளர்கள் எழுதிய ஒரு கட்டுரை. இது கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்; பூண்டு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் குறையும் என்கிறது.
பொதுவாகவே நார்ச் சத்துள்ள உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. நார்ச் சத்து உணவுப் பாதையை, குறிப்பாக பெருங்குடலையும் அதற்குக் கீழுள்ள உணவுப் பாதையையும் தடைகளில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த நார்ச் சத்து உணவுப் பாதையில் நகரும் போது கூடவே கொலஸ்ட்ராலையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது. இதனால் உணவிலும், செரிமான திரவங்களிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்தத்திற்கு போகாமல், மலத்திற்குப் போய் உடம்பிற்கு வெளியே போய் விடுகிறது.  
கொத்தவரங்காயைப் பொறுத்த வரையில் அதன் நார்ச் சத்து தவிர, மாவுச் சத்திலும் ஒரு கொழகொழாப் பிசின் தன்மை இருக்கிறதாம். அதுவும் கொலஸ்ட்ராலைச் சுருக்கு வலை போட்டுக் கட்டி, தரதரவென்று இழுத்துக் கொண்டு உடம்பிற்கு வெளியே கொண்டு போய் விடுகிறதாம்.
பூண்டு, வெங்காயம், வெந்தயம், சிவப்பு மிளகாய், மஞ்சள் ஆகியவற்றிற்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை இருப்பதால், கொத்தவரங்காயோ, பூண்டோ தனித்தனியாக குறைப்பதை விட இரண்டும் கூட்டணி சேர்ந்தால் அதிகம் குறைக்குமோ என்று சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் குறைந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சி முடிவை நாம் அப்படியே எடுத்து உபயோகிப்பதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, இந்த ஆராய்ச்சி எலிகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எலிகளுக்கு ரொம்ப தாராளமாக கொத்தவரங்காய் வழங்கியிருக்கிறார்கள். கொத்தவரங்காயைக் காய வைத்து, 10ற்கு ஒரு பாகமான பொடியாக மாற்றி, அந்தப் பொடியை உணவில் 15 சதவிகிதம் கலந்திருக்கிறார்கள். தினமும் 1 கிலோ உணவு சாப்பிடுகிறவர், கூடவே இன்னொரு கிலோவிற்கு மேலேயெ கொத்தவரங்காய் சாப்பிடுவதற்குச் சமமானது இது.
ஆராய்ச்சி என்றால் இப்படித்தான் சமயங்களில் இருக்கும். இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கொத்தவரங்காய் கிடைக்குமென்றால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள். சுவைக்கு சுவை, உடல்நலத்திற்கு உடல்நலம்.                           

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்: சில நினைவுகள்


என் வாழ்க்கைப் பாதையை நிர்ணயித்த முக்கியமான ஒரு பத்து அனுபவங்கள் உண்டென்றால், அவற்றில் ஒன்று விகடன் மாணவப் பத்திரிகையாளாரப் பயிற்சி பெற்ற ஓராண்டு அனுபவம்.
மாணவப் பத்திரிகையாளர் திட்டம் எப்போது தொடங்கப்பட்டதென்று சரியாக நினைவில்லை. அநேகமாக 1982-ஓ 1983-ஓ ஆக இருக்கலாம். ஆனால், அது குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியடைந்த ஒரு திட்டம் என்பது நினைவிருக்கிறது. விகடன் குழுமத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஜூனியர் விகடன் இதழ் தனது புலனாய்வுக் கட்டுரைகளின் மூலம் மத்தியதர வாசக வட்டங்களில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலம். சௌபா, அசோகன், அருள்செழியன், செண்பகக்குழல்வாய்மொழி போன்ற நிருபர்கள் தங்களது துணிச்சலான கட்டுரைகள் வாயிலாக ஹீரோக்களாக அறிமுகமாயிருந்தனர். அவர்களெல்லாம் மாணவப் பத்திரிகையாளராக அறிமுகமானவர்கள். தமிழில் எழுத ஆர்வமுள்ள எந்தக் கல்லூரி மாணவனுக்கும் விகடனின் பயிற்சி ஒரு கனவுத் திட்டமாக இருந்த காலம். 1984-ல் கல்லூரியில் நுழைந்தது முதல் விகடன் மாணவப் பத்திரிகையளாராக வேண்டும் என்பதே என் பெரிய கனவாக இருந்தது. பள்ளியில் எனக்கு முன்னோடியான ஃப்ரிட்ஸ் மிராண்டா பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலிருந்து மாணவப் புகைப்பட நிருபராக தேர்வு செய்யப்பட்டு, அருள்செழியனுடன் இணைந்து சிறப்பாகப் பணிபுரிந்ததும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.
1985-ல் அந்த வாய்ப்பு கிடைத்தது. “வாருங்கள் மாணப் பத்திரிகையாளர்களே” என்று திட்டத்திற்கான அறிவிப்பு வந்தவுடனேயே முனைப்பாக வேலையைத் தொடங்கினேன். விண்ணப்ப படிவத்தையும், ஒரு கட்டுரையையும் அனுப்பி வைக்க வேண்டும். தூத்துக்குடி அந்தக் காலத்தில் ரௌடியிசத்திற்கு பெயர் பெற்றிருந்தது. பழிக்குப் பழி, பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டிக் கொலை, நாட்டு வெடிகுண்டு வீச்சு, ரௌடிகள் நடத்தும் சாகசங்கள் என்று எழுதுவதற்குப் பஞ்சமில்லாமல் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. கடற்கரைச் சாலைக்கு மிதி வண்டியில் போய் அப்போதைய காவல்துறை உயர் அதிகாரியைச் சந்தித்து பேட்டி கண்டு அதையும் கட்டுரையில் இணைத்திருந்தேன். கட்டுரையை வாசித்துப் பார்த்த போது திருப்தியாக இருந்தது, அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
நேர்முகத் தேர்வு சென்னையில். மதுரைக்குத் தெற்கே இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்திருந்தார்கள். ஒரு மாவட்டத்திற்கு 1-2 நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். அப்போது தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதி. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 4-5 பேர்கள் வந்ததாக நினைவு. பள்ளி நாட்களிலிருந்தே நண்பரும், கல்லூரியில் எனக்கு முன்னோடியுமான கழுகாசலமூர்த்தியும் என்னோடு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஒரு எழுத்துத் தேர்வு. பிறகு கலந்துரையாடல் வடிவில் நேர்முகத் தேர்வு. மதிய உணவிற்குப் பின் அலுவலகத்திற்கு வெளியில் எங்காவது சென்று, ஒரு அனுபவத்தைப் பெற்று வந்து கட்டுரையாக எழுதிக் கொடுக்க வேண்டும். அப்போதைய விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களும், இணை ஆசிரியர் மதன் அவர்களும்தான் நேர்முகம் நடத்தினர். மதியம் விகடன் அலுவலகத்திற்கு வெளியே இருந்த அண்ணா சாலை டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் கிடைத்த முதல் பேருந்தில் மெரினா கடற்கரையில் சென்று இறங்கினேன். சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. என்ன செய்வது என்று தெளிவான ஒரு திட்டம் இல்லாமல் கடற்கரையில் கால் போனபடி நடந்தேன். ஒரு இடத்தில் கருவாடு காயப் போட்டிருந்தார்கள். அங்கே சென்று அந்தக் காட்சியை ஒரு புகைப்படம் எடுத்தேன். அங்கே இருந்த நபர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள். அந்தக் காலத்தில் கடற்கரையை அழகு படுத்தும் திட்டம் ஒன்று அரசிடம் இருந்தது. அதில் மீனவர்கள் கடற்கரையை பயன்படுத்துவதில் பல தடைகளை உருவாக்கப் போவதாக ஐயங்கள் எழவே, மீனவர்கள் வெகுண்டு போராடத் தொடங்கியிருந்தார்கள். ஆக, அந்தக் கருவாடு காயப்போட்டிருந்த நபரிடமே அந்தப் போராட்டங்கள் தொடர்பாக பேட்டியைத் தொடங்கி விசாரிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்குள் கட்டுரை எழுத போதுமான சரக்கு கிடைத்தது. மறுபடி பேருந்து பிடித்து அலுவலகம் சென்று கட்டுரையை எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.
சில வாரங்களுக்குள் நான் ஆவலாக எதிர்பார்த்த செய்தியும் வந்தது. வாழ்க்கையில் அதற்கு முன்னும், பின்னும் எந்த தேர்வு வெற்றியும் அளித்திராத ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்; இன்னின்ன தேதிகளில் சென்னையில் பயிற்சி; மாதாமாதம் உதவித் தொகையாக ரூ. 50 போன்ற செய்திகளை அடங்கிய கடிதத்தை நூறு முறைகளாவது படித்துப் பார்த்திருப்பேன். விரைவிலேயே புகைப்படம், பெயர் போட்டு ஆனந்த விகடனிலும், ஜூனியர் விகடனிலும் செய்தி வந்தது. கடிதத்தையே நூறு தடவை வாசித்தேன்; அந்தச் செய்தியை ஆயிரம் தடவை பார்த்திருப்பேன்.
சென்னை தியாகராய நகரில் ஒரு திருமண மண்டபத்தில்தான் பயிற்சி முகாம் நடைபெற்றது. உறங்க, குளிக்க அங்கே என்னென்ன வசதிகள் செய்திருந்தார்கள் என்று நினைவில்லை. மதியம் பேருந்தில் நல்ல உணவகங்களுக்குச் சென்று உணவருந்தியது நினைவிருக்கிறது. ஒரு நாள் விகடன் அச்சகம் அழைத்துச் சென்று எப்படி பத்திரிகைகள் வடிவமைக்கப்படுகின்றன, அச்சிடப்படுகின்றன என்பதைக் காண்பித்தார்கள். பெரும்பாலும் திருமண மண்டபத்திலேயே வகுப்புகள் நடைபெற்றன. ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திட்டத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். பேச்சுத் தமிழில், நகைச்சுவையோடு, பல உதாரணங்களையும் கொடுத்துப் பேசினார். நாங்கள் தேர்வில் எப்படி செய்திருந்தோம் என்றும் கூறினார். அப்போதெல்லாம், விகடனில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், குறிப்பாக தெளிவின்மை கட்டுரைகளில் வந்து விடக் கூடாது என்பதில் கறாராக இருப்பார்கள். இந்த விஷயத்தை சோதித்தறிய தேர்வில் ஒரு பகுதி இருந்தது. ‘அதில் தூத்துக்குடில இருந்து வந்திருக்கிற அருள் விக்டர் சுரேஷ் மட்டும்தான் முழுசா மார்க் எடுத்துருக்கிறார்’ என்ற ரீதியில் அவர் சொல்ல, அப்படியே ஜிவ்வென்று வானத்திற்குப் போனேன்.
முகாமில் பேச சில பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். புகைப்படப் பயிற்சிக்கு சுபா சுந்தரம் அழைக்கப்பட்டிருந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பல அபூர்வ புகைப்படங்களைக் காண்பித்துப் பேசினார். பெரியார் எப்படி புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிப்பார்; எம்.ஜி.ஆர். ஒரு முறை அவிழ்ந்த வேஷ்டியைக் கட்டுவதைப் படமெடுத்த புகைப்படக் கலைஞரை, மேடையிலிருந்து கீழே குதித்து, காமெராவைப் பிடுங்கி, படச்சுருளைக் கழற்றினார்; இறுதியாக கருணாநிதி கருப்புக் கண்ணாடி அணியாமலும், எம்.ஜி.ஆர் தொப்பி அணியாமலும் இணைந்து எடுத்து எப்படி படம் எடுத்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பேசினார். விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் படங்கள் பலவற்றையும் காட்டினார். அவருடைய அப்போதைய உதவியாளர் சுபா ரவிசங்கர் எவரிடமும் சுலபமாகவும், இனிமையாகவும் பழகுபவர். அவரிடம் நாங்கள் ஒட்டிக் கொண்டோம். புலிகள் முகாம் எங்கே நடக்கிறது என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்து விட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் சுபா சுந்தரம் உடன் இருந்தவர் என்பதாலேயே பெரும் தொந்தரவுகளுக்கு ஆளானவர் ரவிஷங்கர்.
முகாமிற்கு சுஜாதா வந்திருந்தார். நாங்கள் அச்சகத்திற்குப் போய் வந்ததைப் பற்றி ஒரு பத்தி எழுதச் சொன்னார். எழுதி முடித்த பின்னால், எத்தனை பெயர் கூட்டன்பெர்க் பெயரை எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அச்சகத்தில் ஒரு மாதிரி மை வாசம் அடிக்குமே, அதை எத்தனை பேர் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். க்ளினிக்கல் ரைட்டிங் என்பதைப் பற்றி ஒரு உரையாற்றினார்.
முகாமின் இறுதிநாள் ஏற்கனவே பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கும் நிகழ்ச்சி. அருள்செழியன், செண்பகக்குழல்வாய்மொழி, ரமேஷ் பிரபா போன்றவர்களெல்லாம் அதில் சிறந்த பத்திரிகையாளர்களாக விருது பெற்றதாக நினைவு. ரமேஷ் பிரபா பேசியது மட்டும்தான் நினைவிருக்கிறது. ஐ.ஐ.எம். கல்கத்தாவில் படித்துக் கொண்டே மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றவர் அவர். மேலாண்மை, நிர்வாகம், வணிகம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. கல்கத்தாவின் போக்குவரத்து நெரிசலில் களத்திற்குச் சென்று செய்தி திரட்டுவது என்பது கணிசமான நேரத்தைத் தின்று விடும் என்ற ரீதியில் அவர் பேசியது இன்றும் நினைவிருக்கிறது.
முகாம் முடித்து திருப்தியோடு தூத்துக்குடி வந்தேன். மாணவப் பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டை, விசிட்டிங் கார்டுகள், இவற்றை வைத்துக் கொள்ள வெளிர் பச்சை நிறத்தில், குஷன் வைத்து, ஜிப் போட்ட ஒரு file folder முதலானவைதான் எங்களுக்கு அளிக்கப்பட்ட உபகரணங்கள். கையில் சுத்தியல் வைத்திருப்பவனுக்கு உலகமே ஆணியாகத் தோன்றுவது போல், பார்ப்பன அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு. பேனாவைப் பார்க்கும் போதெல்லாம், சமூக அநீதிகளை வேரறுக்கும் வாளைத்தான் கண்டேன். இளம்பச்சை file folderல் சிரித்துக் கொண்டிருக்கும் விகடன் தாத்தாவைப் பார்த்து அவ்வப்போது பெருமையுடன் புன்னகைப்பேன். அவரது உச்சித்தலை கூர்மையாக நீண்டிருக்கும்; எனது தலை பெருமிதத்தால் வீங்கியிருந்தது.
(இன்ஷால்லா தொடர்வேன்)                     

Saturday, January 28, 2012

ஜெயமோகனின் ‘ரப்பர்’: ஒரு வாசக விமர்சனம்


ஜெயமோகன் எழுதிய ‘ரப்பர்’ நாவலை சமீபத்தில் வாசித்தேன். இந்த நாவலைப் பற்றி பல ஆண்டுகளாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் நாவல் என்ற கலை வடிவத்தில் முழுமை அமைந்த முதல் தமிழ் படைப்பு என்பது போல ஜெயமோகன் பேசி, அது சர்ச்சைக்குள்ளானதாக ஜெயமோகனே அவர் தளத்தில் எழுதியதை வாசித்திருக்கிறேன். மேலும், இது அவரது முதல் நாவல் என்பதையும் அறிந்திருந்தேன், அவரது பிந்தைய நாவல்களான காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி முதலிய நாவல்களையும், பல சிறுகதைத் தொகுப்புகளையும், புனைவல்லாத படைப்புகளையும் வாசித்து, அவற்றில் பலவற்றை சிறப்பாகக் கருதி வருவதால், அவரது முதலாவது நாவலை வாசிக்க ஆர்வம் கொண்டிருந்தேன். நாவல் எழுதப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அதைக் குறித்து பிறர் எழுதிய விமர்சனங்களும், பிற கருத்துக்களும் இணையத்தில் இருக்குமென்பதால், நாவலை வாசித்து முடித்த கையோடு அவற்றையும் தேடி வாசித்தேன். எனவே, இந்த விமர்சனம் நாவலைப் பற்றியது மட்டுமல்ல, சில விமர்சனங்களின் மீதும்.
‘ரப்பர்’ நான் வாசித்த ஜெயமோகன் நாவல்களுக்குள்ளேயே வாசித்த எளிதான நாவல். சில மணிநேரங்களுக்குள்ளேயே வாசித்து முடித்து விட்டேன். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இது ஆரம்ப நிலை வாசகர்களைக் கவரும் வண்ணம், எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது. நாவலில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு தெரியாதவர்களை கொஞ்சம் பயமுறுத்தலாம். மற்றபடி, எளிய நடை; எளிய தத்துவ அணுகுமுறை; வெளிப்படையான, சற்று அதீதமான உணர்ச்சித் தெறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கதை சொல்லப்பட்டுள்ளது. நாவலின் நீளம் குறை. இது ஒரு போட்டிக்காக எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் போட்டியின் விதிப்படி 200 பக்கங்கள்தான் எழுதலாம். எனவே, 290 பக்கங்களாக எழுதப்பட்டதில் மூன்றிலொரு பங்கு வெட்டப்பட்டிருக்கிறது. பின்னர் சேர்க்கப்படவில்லை. நாவலை வாசிக்கும் போது அந்த வெட்டுத் தழும்புகள் ஆங்காங்கே புலப்படுகின்றன. கதையில் வரும் சில கதாபாத்திரங்களும், சம்பவங்களும் தேவைப்படும் அளவிற்கு விரிவாக சொல்லப்படவில்லை. உதாரணம், தங்கம் என்ற கதாபாத்திரமும், அவளது வாழ்வும்.
நாவலில் ஜெயமோகன் பயன்படுத்தும் நடை அவர் பின்னர் பயன்படுத்திய நடையை விட கச்சிதமாக இருக்கிறது. ஆங்காங்கே சுஜாதா வந்து எட்டிப்பார்ப்பதாகத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு:
“உள்ளிருந்து ஒரு பெண் தட்டில் காப்பியுடன் வந்தாள். பாவாடை தாவணி அணிந்திருந்தாள். முகமும் கழுத்தும் வெளிறிய வெண்ணிறத்தில், மெல்லிய தேமல்களுடன் இருந்தன. ஆரோக்கியமின்மை அவள் உடலெங்கும் தெரிந்தது. கண்கள் மட்டும் பெரிதாக, பிரகாசமாய், தயக்கத்தையும் சட்டென்று புண்படக்கூடிய ஆவலையும் காட்டக் கூடியனவாய் இருந்தன. காபியை வைத்த போது அவள் பார்வை ராமின் கண்களைத் தொட்டு விலகியது.”
ஜெயமோகனின் படைப்புகளில் பத, தர வேறுபாடுகள் எப்போதுமே அதிகமாக இருக்கும். காடு, ஏழாம் உலகம் முதலிய தரமிக்க நாவல்களைப் படைத்தவரா கன்னியாகுமரி என்ற நாவலையும் எழுதினார் என்று வியக்க வைப்பார். சிந்தனையிலும், மொழியிலும் பல படைப்புகளில் உச்சத்தைத் தொடும் அவர் சில படைப்புகளில், சிந்தனையிலும், மொழியிலும் பாமரத்தனத்தை வெளிப்படுத்தி பாதாளத்தைத் தொடுதுவதும் உண்டு. சமயங்களில் ஒரே படைப்புக்குள்ளும் இந்த வேறுபாடுகளைக் காணலாம். “ரப்பர்” நாவலிலும் இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:
“பிரான்ஸிஸ் சட்டென்று புல்லரித்தான். எத்தனை அற்புதமான வரிகள்! இவை ஏன் இதுவரை புரியவில்லை? திரும்பத் திரும்பக் கேட்டும் என் மனசைத் தாக்கவில்லை? ஒவ்வொன்றுக்கும் ஒரு மனோபாவம் வேண்டுமா?  ஒரு சந்தர்ப்பம், ஒரு காலம் வர வேண்டுமா? அந்த வார்த்தைகளைப் பலமுறை மனசுக்குள் திரும்பத் திரும்பக் கூறினான். சொல்லச் சொல்ல அவை மந்திரம் போல அவனுள் விரிந்தன. புதுப் புது அர்த்தங்களுடன் வளர்ந்தன. ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை.”
ரமணிச்சந்திரன் எழுதுவது போலிருக்கிறது மேற்கண்டது. அதிலும் “ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை” ரொம்ப சூப்பர். அப்போதே மணிரத்னம் படத்திற்கு வசனம் எழுதத் தயாராகி இருந்திருக்கிறார் ஜெயமோகன்.
===
“ரப்பர்” மீதான விமர்சனங்களைக் கண்ட போது என் கவனத்தை ஈர்த்தது பெரும்பாலோர் இதை ஒரு சூழியல் நாவலாக சித்தரித்திருப்பது. காடுகளை, அல்லது வாழைத் தோட்டங்களை அழித்து ரப்பர் மரங்களை நட்டது சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தியுள்ளது; அதை எதிர்த்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்று பலர் சிலாகித்திருக்கிறார்கள் (உதாரணத்திற்கு சிலிக்கான் ஷெல்ஃப் என்ற தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரை வேக்காட்டு விமர்சனத்தைக் குறிப்பிடலாம்). “ரப்பர்” என்று தலைப்பைச் சூட்டப்பட்டுள்ள 175 பக்க நாவலில் ரப்பரின் தீமைகள் சொல்லப்படுவதும், அதை எதிர்க்கும் இயக்கம் பற்றி குறிப்பிடப்படுவதும் மொத்தமாக நான்கு பக்கங்களைத் தாண்டாது.
“ரப்பர்” சூழியல் நாவல் இல்லையெனில் வேறென்ன? நூலிலேயே அது சமூக நாவல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் சரியும் கூட. “ரப்பர்” என்பது இந்த நாவலில் ஒரு உபகரணம்தான். நாவலின் அடிநாதம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரபலம் பெற்றெழுந்த நாடார்களின், குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சமூக வரலாறுதான். நாடார்களின் எழுச்சி, பல இடை, உயர் நிலைச் சாதிக்காரர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தில் நடந்தது. அதில் நாயர் சாதிக்காரர்களின் சமூக வரலாற்றையும் “ரப்பர்” ஓரளவுக்குத் தொடுகிறது.
“பண்புடன்” என்ற மின்னிதழில் “வன்மம் தோய்ந்த வசை” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள மதிப்புரை கிறிஸ்தவ நாடார்களின் சாதி, மத வரலாற்றை “ரப்பர்” காழ்ப்புடன் சொல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறது. சுட்டிக் காட்டப்பட்ட பல குறைகளுக்கு நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் தான் எழுத வந்த விஷயத்தைப் பற்றி பெரிதாக ஆய்வோ, உழைப்போ செய்ததாகத் தோன்றவில்லை.
“பண்புடன்” இதழில் விமர்சனம் எழுதியவர் நாவலில் பாஸ்டராகக் குறிப்பிடப்படும் ‘ஜோசப் ராஜேந்திரன்’ உண்மையில் பாதிரியார்தான். ப்ரோட்டஸ்டாண்டு பாஸ்டருக்கும், கத்தோலிக்க பாதிரியாருக்கும் வேறுபாடு தெரியாமல் ஜெயமோகன் குழப்புகிறார் என்கிறார். நுட்பமாக வாசித்தால் நாவலின் மையமாக இருக்கும் பெருவட்டர் குடும்பம் ப்ரோட்டஸ்டாண்டு பிரிவைப் பின்பற்றும் குடும்பம் என்பது புலப்படும். ‘ஜோசப் ராஜேந்திரன்’ குறித்த வர்ணனையிலேயே அவர் ப்ரோட்டஸ்டாண்டு பாஸ்டர்தான் என்று துலங்கி விடுகிறது. ஏனென்றால், கத்தோலிக்க பாதிரிமார்கள் தங்கச் சங்கிலி அணிவது வழக்கமில்லை. அதே நேரத்தில் பெருவட்டர் குடும்பத்தைச் சேர்ந்த “திரேஸ்,” “பிரான்சிஸ்” போன்ற பெயர்கள் ப்ரோட்டஸ்டாண்டு குடும்பங்களில் வைக்கப்படுவது வெகு அபூர்வம். ஆக மொத்தம், தான் எழுத முன்வந்த ப்ரோட்டஸ்டாண்டு நாடார்கள் சமூகத்தைப் பற்றிய ஜெயமோகனின் அறிவு மேலோட்டமானது என்றுதான் தோன்றுகிறது.  
நாவல் ப்ரோட்டஸ்டாண்டு நாடார்களை நான்கு தலைமுறைகளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க, இடையிடையே நாயர்களைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. போதிய விபரமும், விவரிப்பும் இல்லாததால்தான் இவற்றைக் குறிப்புகள் என்கிறேன். ஒரு வேளை, இவையெல்லாம் நாவலின் நீளத்தைக் குறைக்கும் போது பலி கொடுக்கப்பட்டனவோ என்னவோ. தங்கம் என்னும் நாயர் பெண் நாவலின் முக்கிய பாத்திரமாக காண்பிக்கப்படுகிறாள். செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து, அந்தக் குடும்பம் சரிவைச் சந்தித்தபின் பெருவட்டர் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வருகிறாள். அவளுக்கும், பெருவட்டர் வீட்டிலிருக்கும் திருமணமாகாத இளைஞனுக்கும் காம உறவிருக்கிறது. அவளுக்கு நாவலில் சொல்ல எவ்வளவோ இருக்கலாம். ஆனால், அவள் ஒரு தடாகத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டு போய் விடுகிறாள். ஜெயமோகன் படைப்புகளில் இளம் நாயர் பெண்களும், தடாகமும் சந்தித்தால் விபரீதம்தான் விளைகின்றது என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டபடியால் இந்தச் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் ஆயாசத்தைத்தான் ஏற்படுத்துகிறது.           
 நாவலின் போக்கில் பல தருணங்களில் நாடகத்தனத்தைப் பார்க்க முடிகிறது. முடிவு கூட சினிமாவாகத்தான் இருக்கிறது. பிரான்சிஸ் திருந்துகிறான். ரப்பரின் தீமைகளை உணர்கிறான். சூழியல் இயக்கத்தில் இணைகிறான்.  தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரின் புறக்கணிக்க முடியாத படைப்பல்ல இது என்ற எண்ணம்தான் நாவலை முடிக்கும் போது எழுகிறது.
பின்குறிப்பு: நாவலைக் குறித்து இணையத்தில் தேடிய போது ஜெயமோகனின் படைப்புலகம் குறித்த இரு பதிவுகளைக் கண்டேன். ஜெகத் என்பவர் கைமண் அளவு என்ற தனது வலைப்பூவில் பதிவு செய்தவை இவை. மிக விரிவாகவும், தெளிவாகவும் எழுதப்பட்ட விமர்சனங்கள் இவை. வேறு எவராவது ஜெயமோகன் படைப்புகள் பற்றி இவ்வளவு சிறப்பாக விமர்சனங்களை எழுதியிருப்பார்களா என்று தோன்றுகிறது. ஏதோ காரணத்தால் இவர் தன் முயற்சியை நடுவிலேயே நிறுத்தி விட்டார் என்பது துரதிர்ஷ்டம்.