Sunday, February 12, 2012

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்: சில நினைவுகள்


என் வாழ்க்கைப் பாதையை நிர்ணயித்த முக்கியமான ஒரு பத்து அனுபவங்கள் உண்டென்றால், அவற்றில் ஒன்று விகடன் மாணவப் பத்திரிகையாளாரப் பயிற்சி பெற்ற ஓராண்டு அனுபவம்.
மாணவப் பத்திரிகையாளர் திட்டம் எப்போது தொடங்கப்பட்டதென்று சரியாக நினைவில்லை. அநேகமாக 1982-ஓ 1983-ஓ ஆக இருக்கலாம். ஆனால், அது குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியடைந்த ஒரு திட்டம் என்பது நினைவிருக்கிறது. விகடன் குழுமத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஜூனியர் விகடன் இதழ் தனது புலனாய்வுக் கட்டுரைகளின் மூலம் மத்தியதர வாசக வட்டங்களில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலம். சௌபா, அசோகன், அருள்செழியன், செண்பகக்குழல்வாய்மொழி போன்ற நிருபர்கள் தங்களது துணிச்சலான கட்டுரைகள் வாயிலாக ஹீரோக்களாக அறிமுகமாயிருந்தனர். அவர்களெல்லாம் மாணவப் பத்திரிகையாளராக அறிமுகமானவர்கள். தமிழில் எழுத ஆர்வமுள்ள எந்தக் கல்லூரி மாணவனுக்கும் விகடனின் பயிற்சி ஒரு கனவுத் திட்டமாக இருந்த காலம். 1984-ல் கல்லூரியில் நுழைந்தது முதல் விகடன் மாணவப் பத்திரிகையளாராக வேண்டும் என்பதே என் பெரிய கனவாக இருந்தது. பள்ளியில் எனக்கு முன்னோடியான ஃப்ரிட்ஸ் மிராண்டா பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலிருந்து மாணவப் புகைப்பட நிருபராக தேர்வு செய்யப்பட்டு, அருள்செழியனுடன் இணைந்து சிறப்பாகப் பணிபுரிந்ததும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.
1985-ல் அந்த வாய்ப்பு கிடைத்தது. “வாருங்கள் மாணப் பத்திரிகையாளர்களே” என்று திட்டத்திற்கான அறிவிப்பு வந்தவுடனேயே முனைப்பாக வேலையைத் தொடங்கினேன். விண்ணப்ப படிவத்தையும், ஒரு கட்டுரையையும் அனுப்பி வைக்க வேண்டும். தூத்துக்குடி அந்தக் காலத்தில் ரௌடியிசத்திற்கு பெயர் பெற்றிருந்தது. பழிக்குப் பழி, பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டிக் கொலை, நாட்டு வெடிகுண்டு வீச்சு, ரௌடிகள் நடத்தும் சாகசங்கள் என்று எழுதுவதற்குப் பஞ்சமில்லாமல் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. கடற்கரைச் சாலைக்கு மிதி வண்டியில் போய் அப்போதைய காவல்துறை உயர் அதிகாரியைச் சந்தித்து பேட்டி கண்டு அதையும் கட்டுரையில் இணைத்திருந்தேன். கட்டுரையை வாசித்துப் பார்த்த போது திருப்தியாக இருந்தது, அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
நேர்முகத் தேர்வு சென்னையில். மதுரைக்குத் தெற்கே இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்திருந்தார்கள். ஒரு மாவட்டத்திற்கு 1-2 நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். அப்போது தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதி. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 4-5 பேர்கள் வந்ததாக நினைவு. பள்ளி நாட்களிலிருந்தே நண்பரும், கல்லூரியில் எனக்கு முன்னோடியுமான கழுகாசலமூர்த்தியும் என்னோடு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஒரு எழுத்துத் தேர்வு. பிறகு கலந்துரையாடல் வடிவில் நேர்முகத் தேர்வு. மதிய உணவிற்குப் பின் அலுவலகத்திற்கு வெளியில் எங்காவது சென்று, ஒரு அனுபவத்தைப் பெற்று வந்து கட்டுரையாக எழுதிக் கொடுக்க வேண்டும். அப்போதைய விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களும், இணை ஆசிரியர் மதன் அவர்களும்தான் நேர்முகம் நடத்தினர். மதியம் விகடன் அலுவலகத்திற்கு வெளியே இருந்த அண்ணா சாலை டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் கிடைத்த முதல் பேருந்தில் மெரினா கடற்கரையில் சென்று இறங்கினேன். சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. என்ன செய்வது என்று தெளிவான ஒரு திட்டம் இல்லாமல் கடற்கரையில் கால் போனபடி நடந்தேன். ஒரு இடத்தில் கருவாடு காயப் போட்டிருந்தார்கள். அங்கே சென்று அந்தக் காட்சியை ஒரு புகைப்படம் எடுத்தேன். அங்கே இருந்த நபர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள். அந்தக் காலத்தில் கடற்கரையை அழகு படுத்தும் திட்டம் ஒன்று அரசிடம் இருந்தது. அதில் மீனவர்கள் கடற்கரையை பயன்படுத்துவதில் பல தடைகளை உருவாக்கப் போவதாக ஐயங்கள் எழவே, மீனவர்கள் வெகுண்டு போராடத் தொடங்கியிருந்தார்கள். ஆக, அந்தக் கருவாடு காயப்போட்டிருந்த நபரிடமே அந்தப் போராட்டங்கள் தொடர்பாக பேட்டியைத் தொடங்கி விசாரிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்குள் கட்டுரை எழுத போதுமான சரக்கு கிடைத்தது. மறுபடி பேருந்து பிடித்து அலுவலகம் சென்று கட்டுரையை எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.
சில வாரங்களுக்குள் நான் ஆவலாக எதிர்பார்த்த செய்தியும் வந்தது. வாழ்க்கையில் அதற்கு முன்னும், பின்னும் எந்த தேர்வு வெற்றியும் அளித்திராத ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்; இன்னின்ன தேதிகளில் சென்னையில் பயிற்சி; மாதாமாதம் உதவித் தொகையாக ரூ. 50 போன்ற செய்திகளை அடங்கிய கடிதத்தை நூறு முறைகளாவது படித்துப் பார்த்திருப்பேன். விரைவிலேயே புகைப்படம், பெயர் போட்டு ஆனந்த விகடனிலும், ஜூனியர் விகடனிலும் செய்தி வந்தது. கடிதத்தையே நூறு தடவை வாசித்தேன்; அந்தச் செய்தியை ஆயிரம் தடவை பார்த்திருப்பேன்.
சென்னை தியாகராய நகரில் ஒரு திருமண மண்டபத்தில்தான் பயிற்சி முகாம் நடைபெற்றது. உறங்க, குளிக்க அங்கே என்னென்ன வசதிகள் செய்திருந்தார்கள் என்று நினைவில்லை. மதியம் பேருந்தில் நல்ல உணவகங்களுக்குச் சென்று உணவருந்தியது நினைவிருக்கிறது. ஒரு நாள் விகடன் அச்சகம் அழைத்துச் சென்று எப்படி பத்திரிகைகள் வடிவமைக்கப்படுகின்றன, அச்சிடப்படுகின்றன என்பதைக் காண்பித்தார்கள். பெரும்பாலும் திருமண மண்டபத்திலேயே வகுப்புகள் நடைபெற்றன. ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திட்டத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். பேச்சுத் தமிழில், நகைச்சுவையோடு, பல உதாரணங்களையும் கொடுத்துப் பேசினார். நாங்கள் தேர்வில் எப்படி செய்திருந்தோம் என்றும் கூறினார். அப்போதெல்லாம், விகடனில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், குறிப்பாக தெளிவின்மை கட்டுரைகளில் வந்து விடக் கூடாது என்பதில் கறாராக இருப்பார்கள். இந்த விஷயத்தை சோதித்தறிய தேர்வில் ஒரு பகுதி இருந்தது. ‘அதில் தூத்துக்குடில இருந்து வந்திருக்கிற அருள் விக்டர் சுரேஷ் மட்டும்தான் முழுசா மார்க் எடுத்துருக்கிறார்’ என்ற ரீதியில் அவர் சொல்ல, அப்படியே ஜிவ்வென்று வானத்திற்குப் போனேன்.
முகாமில் பேச சில பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். புகைப்படப் பயிற்சிக்கு சுபா சுந்தரம் அழைக்கப்பட்டிருந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பல அபூர்வ புகைப்படங்களைக் காண்பித்துப் பேசினார். பெரியார் எப்படி புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிப்பார்; எம்.ஜி.ஆர். ஒரு முறை அவிழ்ந்த வேஷ்டியைக் கட்டுவதைப் படமெடுத்த புகைப்படக் கலைஞரை, மேடையிலிருந்து கீழே குதித்து, காமெராவைப் பிடுங்கி, படச்சுருளைக் கழற்றினார்; இறுதியாக கருணாநிதி கருப்புக் கண்ணாடி அணியாமலும், எம்.ஜி.ஆர் தொப்பி அணியாமலும் இணைந்து எடுத்து எப்படி படம் எடுத்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பேசினார். விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் படங்கள் பலவற்றையும் காட்டினார். அவருடைய அப்போதைய உதவியாளர் சுபா ரவிசங்கர் எவரிடமும் சுலபமாகவும், இனிமையாகவும் பழகுபவர். அவரிடம் நாங்கள் ஒட்டிக் கொண்டோம். புலிகள் முகாம் எங்கே நடக்கிறது என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்து விட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் சுபா சுந்தரம் உடன் இருந்தவர் என்பதாலேயே பெரும் தொந்தரவுகளுக்கு ஆளானவர் ரவிஷங்கர்.
முகாமிற்கு சுஜாதா வந்திருந்தார். நாங்கள் அச்சகத்திற்குப் போய் வந்ததைப் பற்றி ஒரு பத்தி எழுதச் சொன்னார். எழுதி முடித்த பின்னால், எத்தனை பெயர் கூட்டன்பெர்க் பெயரை எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அச்சகத்தில் ஒரு மாதிரி மை வாசம் அடிக்குமே, அதை எத்தனை பேர் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். க்ளினிக்கல் ரைட்டிங் என்பதைப் பற்றி ஒரு உரையாற்றினார்.
முகாமின் இறுதிநாள் ஏற்கனவே பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கும் நிகழ்ச்சி. அருள்செழியன், செண்பகக்குழல்வாய்மொழி, ரமேஷ் பிரபா போன்றவர்களெல்லாம் அதில் சிறந்த பத்திரிகையாளர்களாக விருது பெற்றதாக நினைவு. ரமேஷ் பிரபா பேசியது மட்டும்தான் நினைவிருக்கிறது. ஐ.ஐ.எம். கல்கத்தாவில் படித்துக் கொண்டே மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றவர் அவர். மேலாண்மை, நிர்வாகம், வணிகம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. கல்கத்தாவின் போக்குவரத்து நெரிசலில் களத்திற்குச் சென்று செய்தி திரட்டுவது என்பது கணிசமான நேரத்தைத் தின்று விடும் என்ற ரீதியில் அவர் பேசியது இன்றும் நினைவிருக்கிறது.
முகாம் முடித்து திருப்தியோடு தூத்துக்குடி வந்தேன். மாணவப் பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டை, விசிட்டிங் கார்டுகள், இவற்றை வைத்துக் கொள்ள வெளிர் பச்சை நிறத்தில், குஷன் வைத்து, ஜிப் போட்ட ஒரு file folder முதலானவைதான் எங்களுக்கு அளிக்கப்பட்ட உபகரணங்கள். கையில் சுத்தியல் வைத்திருப்பவனுக்கு உலகமே ஆணியாகத் தோன்றுவது போல், பார்ப்பன அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு. பேனாவைப் பார்க்கும் போதெல்லாம், சமூக அநீதிகளை வேரறுக்கும் வாளைத்தான் கண்டேன். இளம்பச்சை file folderல் சிரித்துக் கொண்டிருக்கும் விகடன் தாத்தாவைப் பார்த்து அவ்வப்போது பெருமையுடன் புன்னகைப்பேன். அவரது உச்சித்தலை கூர்மையாக நீண்டிருக்கும்; எனது தலை பெருமிதத்தால் வீங்கியிருந்தது.
(இன்ஷால்லா தொடர்வேன்)                     

Saturday, January 28, 2012

ஜெயமோகனின் ‘ரப்பர்’: ஒரு வாசக விமர்சனம்


ஜெயமோகன் எழுதிய ‘ரப்பர்’ நாவலை சமீபத்தில் வாசித்தேன். இந்த நாவலைப் பற்றி பல ஆண்டுகளாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் நாவல் என்ற கலை வடிவத்தில் முழுமை அமைந்த முதல் தமிழ் படைப்பு என்பது போல ஜெயமோகன் பேசி, அது சர்ச்சைக்குள்ளானதாக ஜெயமோகனே அவர் தளத்தில் எழுதியதை வாசித்திருக்கிறேன். மேலும், இது அவரது முதல் நாவல் என்பதையும் அறிந்திருந்தேன், அவரது பிந்தைய நாவல்களான காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி முதலிய நாவல்களையும், பல சிறுகதைத் தொகுப்புகளையும், புனைவல்லாத படைப்புகளையும் வாசித்து, அவற்றில் பலவற்றை சிறப்பாகக் கருதி வருவதால், அவரது முதலாவது நாவலை வாசிக்க ஆர்வம் கொண்டிருந்தேன். நாவல் எழுதப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அதைக் குறித்து பிறர் எழுதிய விமர்சனங்களும், பிற கருத்துக்களும் இணையத்தில் இருக்குமென்பதால், நாவலை வாசித்து முடித்த கையோடு அவற்றையும் தேடி வாசித்தேன். எனவே, இந்த விமர்சனம் நாவலைப் பற்றியது மட்டுமல்ல, சில விமர்சனங்களின் மீதும்.
‘ரப்பர்’ நான் வாசித்த ஜெயமோகன் நாவல்களுக்குள்ளேயே வாசித்த எளிதான நாவல். சில மணிநேரங்களுக்குள்ளேயே வாசித்து முடித்து விட்டேன். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இது ஆரம்ப நிலை வாசகர்களைக் கவரும் வண்ணம், எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது. நாவலில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு தெரியாதவர்களை கொஞ்சம் பயமுறுத்தலாம். மற்றபடி, எளிய நடை; எளிய தத்துவ அணுகுமுறை; வெளிப்படையான, சற்று அதீதமான உணர்ச்சித் தெறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கதை சொல்லப்பட்டுள்ளது. நாவலின் நீளம் குறை. இது ஒரு போட்டிக்காக எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் போட்டியின் விதிப்படி 200 பக்கங்கள்தான் எழுதலாம். எனவே, 290 பக்கங்களாக எழுதப்பட்டதில் மூன்றிலொரு பங்கு வெட்டப்பட்டிருக்கிறது. பின்னர் சேர்க்கப்படவில்லை. நாவலை வாசிக்கும் போது அந்த வெட்டுத் தழும்புகள் ஆங்காங்கே புலப்படுகின்றன. கதையில் வரும் சில கதாபாத்திரங்களும், சம்பவங்களும் தேவைப்படும் அளவிற்கு விரிவாக சொல்லப்படவில்லை. உதாரணம், தங்கம் என்ற கதாபாத்திரமும், அவளது வாழ்வும்.
நாவலில் ஜெயமோகன் பயன்படுத்தும் நடை அவர் பின்னர் பயன்படுத்திய நடையை விட கச்சிதமாக இருக்கிறது. ஆங்காங்கே சுஜாதா வந்து எட்டிப்பார்ப்பதாகத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு:
“உள்ளிருந்து ஒரு பெண் தட்டில் காப்பியுடன் வந்தாள். பாவாடை தாவணி அணிந்திருந்தாள். முகமும் கழுத்தும் வெளிறிய வெண்ணிறத்தில், மெல்லிய தேமல்களுடன் இருந்தன. ஆரோக்கியமின்மை அவள் உடலெங்கும் தெரிந்தது. கண்கள் மட்டும் பெரிதாக, பிரகாசமாய், தயக்கத்தையும் சட்டென்று புண்படக்கூடிய ஆவலையும் காட்டக் கூடியனவாய் இருந்தன. காபியை வைத்த போது அவள் பார்வை ராமின் கண்களைத் தொட்டு விலகியது.”
ஜெயமோகனின் படைப்புகளில் பத, தர வேறுபாடுகள் எப்போதுமே அதிகமாக இருக்கும். காடு, ஏழாம் உலகம் முதலிய தரமிக்க நாவல்களைப் படைத்தவரா கன்னியாகுமரி என்ற நாவலையும் எழுதினார் என்று வியக்க வைப்பார். சிந்தனையிலும், மொழியிலும் பல படைப்புகளில் உச்சத்தைத் தொடும் அவர் சில படைப்புகளில், சிந்தனையிலும், மொழியிலும் பாமரத்தனத்தை வெளிப்படுத்தி பாதாளத்தைத் தொடுதுவதும் உண்டு. சமயங்களில் ஒரே படைப்புக்குள்ளும் இந்த வேறுபாடுகளைக் காணலாம். “ரப்பர்” நாவலிலும் இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:
“பிரான்ஸிஸ் சட்டென்று புல்லரித்தான். எத்தனை அற்புதமான வரிகள்! இவை ஏன் இதுவரை புரியவில்லை? திரும்பத் திரும்பக் கேட்டும் என் மனசைத் தாக்கவில்லை? ஒவ்வொன்றுக்கும் ஒரு மனோபாவம் வேண்டுமா?  ஒரு சந்தர்ப்பம், ஒரு காலம் வர வேண்டுமா? அந்த வார்த்தைகளைப் பலமுறை மனசுக்குள் திரும்பத் திரும்பக் கூறினான். சொல்லச் சொல்ல அவை மந்திரம் போல அவனுள் விரிந்தன. புதுப் புது அர்த்தங்களுடன் வளர்ந்தன. ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை.”
ரமணிச்சந்திரன் எழுதுவது போலிருக்கிறது மேற்கண்டது. அதிலும் “ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை” ரொம்ப சூப்பர். அப்போதே மணிரத்னம் படத்திற்கு வசனம் எழுதத் தயாராகி இருந்திருக்கிறார் ஜெயமோகன்.
===
“ரப்பர்” மீதான விமர்சனங்களைக் கண்ட போது என் கவனத்தை ஈர்த்தது பெரும்பாலோர் இதை ஒரு சூழியல் நாவலாக சித்தரித்திருப்பது. காடுகளை, அல்லது வாழைத் தோட்டங்களை அழித்து ரப்பர் மரங்களை நட்டது சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தியுள்ளது; அதை எதிர்த்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்று பலர் சிலாகித்திருக்கிறார்கள் (உதாரணத்திற்கு சிலிக்கான் ஷெல்ஃப் என்ற தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரை வேக்காட்டு விமர்சனத்தைக் குறிப்பிடலாம்). “ரப்பர்” என்று தலைப்பைச் சூட்டப்பட்டுள்ள 175 பக்க நாவலில் ரப்பரின் தீமைகள் சொல்லப்படுவதும், அதை எதிர்க்கும் இயக்கம் பற்றி குறிப்பிடப்படுவதும் மொத்தமாக நான்கு பக்கங்களைத் தாண்டாது.
“ரப்பர்” சூழியல் நாவல் இல்லையெனில் வேறென்ன? நூலிலேயே அது சமூக நாவல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் சரியும் கூட. “ரப்பர்” என்பது இந்த நாவலில் ஒரு உபகரணம்தான். நாவலின் அடிநாதம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரபலம் பெற்றெழுந்த நாடார்களின், குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சமூக வரலாறுதான். நாடார்களின் எழுச்சி, பல இடை, உயர் நிலைச் சாதிக்காரர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தில் நடந்தது. அதில் நாயர் சாதிக்காரர்களின் சமூக வரலாற்றையும் “ரப்பர்” ஓரளவுக்குத் தொடுகிறது.
“பண்புடன்” என்ற மின்னிதழில் “வன்மம் தோய்ந்த வசை” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள மதிப்புரை கிறிஸ்தவ நாடார்களின் சாதி, மத வரலாற்றை “ரப்பர்” காழ்ப்புடன் சொல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறது. சுட்டிக் காட்டப்பட்ட பல குறைகளுக்கு நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் தான் எழுத வந்த விஷயத்தைப் பற்றி பெரிதாக ஆய்வோ, உழைப்போ செய்ததாகத் தோன்றவில்லை.
“பண்புடன்” இதழில் விமர்சனம் எழுதியவர் நாவலில் பாஸ்டராகக் குறிப்பிடப்படும் ‘ஜோசப் ராஜேந்திரன்’ உண்மையில் பாதிரியார்தான். ப்ரோட்டஸ்டாண்டு பாஸ்டருக்கும், கத்தோலிக்க பாதிரியாருக்கும் வேறுபாடு தெரியாமல் ஜெயமோகன் குழப்புகிறார் என்கிறார். நுட்பமாக வாசித்தால் நாவலின் மையமாக இருக்கும் பெருவட்டர் குடும்பம் ப்ரோட்டஸ்டாண்டு பிரிவைப் பின்பற்றும் குடும்பம் என்பது புலப்படும். ‘ஜோசப் ராஜேந்திரன்’ குறித்த வர்ணனையிலேயே அவர் ப்ரோட்டஸ்டாண்டு பாஸ்டர்தான் என்று துலங்கி விடுகிறது. ஏனென்றால், கத்தோலிக்க பாதிரிமார்கள் தங்கச் சங்கிலி அணிவது வழக்கமில்லை. அதே நேரத்தில் பெருவட்டர் குடும்பத்தைச் சேர்ந்த “திரேஸ்,” “பிரான்சிஸ்” போன்ற பெயர்கள் ப்ரோட்டஸ்டாண்டு குடும்பங்களில் வைக்கப்படுவது வெகு அபூர்வம். ஆக மொத்தம், தான் எழுத முன்வந்த ப்ரோட்டஸ்டாண்டு நாடார்கள் சமூகத்தைப் பற்றிய ஜெயமோகனின் அறிவு மேலோட்டமானது என்றுதான் தோன்றுகிறது.  
நாவல் ப்ரோட்டஸ்டாண்டு நாடார்களை நான்கு தலைமுறைகளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க, இடையிடையே நாயர்களைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. போதிய விபரமும், விவரிப்பும் இல்லாததால்தான் இவற்றைக் குறிப்புகள் என்கிறேன். ஒரு வேளை, இவையெல்லாம் நாவலின் நீளத்தைக் குறைக்கும் போது பலி கொடுக்கப்பட்டனவோ என்னவோ. தங்கம் என்னும் நாயர் பெண் நாவலின் முக்கிய பாத்திரமாக காண்பிக்கப்படுகிறாள். செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து, அந்தக் குடும்பம் சரிவைச் சந்தித்தபின் பெருவட்டர் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வருகிறாள். அவளுக்கும், பெருவட்டர் வீட்டிலிருக்கும் திருமணமாகாத இளைஞனுக்கும் காம உறவிருக்கிறது. அவளுக்கு நாவலில் சொல்ல எவ்வளவோ இருக்கலாம். ஆனால், அவள் ஒரு தடாகத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டு போய் விடுகிறாள். ஜெயமோகன் படைப்புகளில் இளம் நாயர் பெண்களும், தடாகமும் சந்தித்தால் விபரீதம்தான் விளைகின்றது என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டபடியால் இந்தச் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் ஆயாசத்தைத்தான் ஏற்படுத்துகிறது.           
 நாவலின் போக்கில் பல தருணங்களில் நாடகத்தனத்தைப் பார்க்க முடிகிறது. முடிவு கூட சினிமாவாகத்தான் இருக்கிறது. பிரான்சிஸ் திருந்துகிறான். ரப்பரின் தீமைகளை உணர்கிறான். சூழியல் இயக்கத்தில் இணைகிறான்.  தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரின் புறக்கணிக்க முடியாத படைப்பல்ல இது என்ற எண்ணம்தான் நாவலை முடிக்கும் போது எழுகிறது.
பின்குறிப்பு: நாவலைக் குறித்து இணையத்தில் தேடிய போது ஜெயமோகனின் படைப்புலகம் குறித்த இரு பதிவுகளைக் கண்டேன். ஜெகத் என்பவர் கைமண் அளவு என்ற தனது வலைப்பூவில் பதிவு செய்தவை இவை. மிக விரிவாகவும், தெளிவாகவும் எழுதப்பட்ட விமர்சனங்கள் இவை. வேறு எவராவது ஜெயமோகன் படைப்புகள் பற்றி இவ்வளவு சிறப்பாக விமர்சனங்களை எழுதியிருப்பார்களா என்று தோன்றுகிறது. ஏதோ காரணத்தால் இவர் தன் முயற்சியை நடுவிலேயே நிறுத்தி விட்டார் என்பது துரதிர்ஷ்டம்.      

Saturday, January 21, 2012

மாமல்லனுக்கு சுஜாதாவின் குஞ்சொன்று கூறும் பதில்


"கல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்" என்ற மாமல்லனின் கருத்தின் மேலிருந்த சந்தேகத்தை அவரிடமே கேட்டுத் தெளிவு பெறலாம் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். கூடவே, சாரு நிவேதிதா தன் வாசகர்களின் தரத்தை உயர்த்துவதற்காக எதுவும் செய்ததில்லை என்ற அவரது குற்றச்சாட்டை மறுத்தும் எழுதியிருந்தேன். எனக்கான பதிலை “விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள்”என்ற தலைப்பில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
 கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் ஆகியோர் பெரிய வாசக வட்டத்தை உருவாக்கி, வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கினார்கள். அதனால்தான் அவர்களை இடைவழிப் பாலமாக இருக்கிறார்கள் என்றேன் என்பது மாமல்லன் கருத்து. தமிழ்வாணன், பி.டி. சாமி, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் இந்த இ.வ.பா குழுமத்தில் சேருவார்களா என்று தெரியவில்லை. எட்டு வயதில் தமிழ்வாணன்; பத்தில் கல்கி; பனிரெண்டில் கையில் கிடைத்த சகலமும்; பதினைந்தில் சுஜாதா, ஜெயகாந்தன், அபூர்வமாகக் கிடைத்த ராஜம் கிருஷ்ணன்; பதினெட்டில் விகடன் மூலமாக கி.ராஜநாராயணன்; இருபத்தி ஆறில் இந்தியா டுடே இலக்கிய மலர் மூலமாக நாஞ்சில் நாடன்; முப்பத்து நான்கில் சென்னைப் புத்தகக் கண்காட்சி வாயிலாக புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன்; அதன் பின்னர் வந்த புத்தகக் கண்காட்சிகள் வழியாக ராஜ் கவுதமன், ஜோ டி க்ரூஸ் சாரு நிவேதிதா; சாரு மூலமாக ப. சிங்காரம், ஜி. நாகராஜன் இந்திரா பார்த்தசாரதி; சுஜாதா வழியாக மனுஷ்யபுத்திரன்; மனுஷ்யபுத்திரன் மூலமாக அ. முத்துலிங்கம்; அ. முத்துலிங்கம் வழியாக பி.ஏ. கிருஷ்ணன்; ஜெயமோகன் மூலமாக கண்மணி குணசேகரன் – இப்படியாக இந்த நாற்பத்து நான்கு வரை விரிந்ததே எனது வாசிப்பனுபவம். வரும் காலங்களில் நகுலனையும், பிரமிளையும் கூட வாசிக்கலாம். சாவதற்கு முன் கோணங்கியைக் கூட வாசிக்க முடியலாம், அல்லது அவரை வாசிக்கும் முயற்சியிலேயே செத்தும் விடலாம், யாருக்குத் தெரியும்?
வாசிப்பதும், எழுதுவதும்; திரைப்படங்களைப் பார்ப்பதும், உருவாக்குவதும்; ஓவியங்களைக்  காண்பதும், தீட்டுவதும், சில அதிர்ஷ்டசாலிகளுக்கே முழு நேரத் தொழிலாக அமைய முடியும். என்னைப் போன்ற பெரும்பாலானவர்களுக்கு வேறு தொழில்கள் அமைந்து விடுகின்றன. கலையைக் கண்டு கொள்வது, ரசிப்பது, அபூர்வமாக படைத்துப் பார்ப்பது இவையனைத்திற்கும் எங்களுக்குக் கிடைக்கும் நேரம் சொற்பமே. கடலளவு இருக்கும் கலைப் படைப்புகளில், புல்லளவே இருக்கும் மானிட வாழ்வில், கடுகளவே காண முடியும் என்பதால்தான் குருநாதர்களும், வழிகாட்டிகளும் தேவைப்படுகிறார்கள். அவர்களில் யார், என்ன செய்தார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
மாமல்லன் சொல்கிறார்: “சுஜாதா சுஜாதா என்கிறீர்களே அவர் அறிமுகப்படுத்தியதெல்லாம் வெகுஜன வாசகர்களுக்கு வித்தியாசமாய் இருப்பதுபோல் தோன்றும் அதே சமயம் ரொம்ப பயமுறுத்தாத வேலியோர வண்ணதாசன்களைத்தான்.
அதில் பெரிய தவறும் இல்லை. அதற்காக, அப்படி அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் ஏதோ பெரும் இலக்கியத் தொண்டாற்றியதைப் போன்ற தொனிதான் சகிக்க முடியவில்லை. மாபெரும் சாதனைகள் புரிந்த இலக்கியவாதிகளையே ‘தொண்டு’ ஆற்றினார் என்று சொல்வது ஏதோ திட்டுவதுபோலத்தான் தோன்றுகிறது. தேனீ தனக்காக சேகரிக்கும் தேனை, சேகரிக்க முடியாமல் இருக்க முடியாததால் சேகரிக்கும் தேனை, தேன் சேகரிப்பு தவிர அதற்கு வேறு ஏதும் தெரியாது என்பதால் அது சேகரிப்பதைத் தொண்டு என்று சொல்ல முடியுமா? தேனின் அற்புதங்கள் அனைத்தையும் அறிந்தேதான் இது சொல்லப்படுகிறது.
கலையின் சிகரங்களுக்கே இதுதானென்கையில், சிறந்த கேளிக்கையாளராய் இருந்த பல தருணங்களில் ஏற்கெனவே எவனெவனோ சேகரித்த ’தேனை’ சொந்த லேபிள் ஒட்டி விநியோகித்த சுஜாதவை இலக்கிய குலதெய்வமாய் இணையத்தில் கொண்டாடுவதை அவரே ஏளனமாய்த்தான் பார்ப்பார் என்பது ஏன் இந்தத் தலைமுறைக்குப் புரிவதில்லை.
இதற்குப் பதிலாக ஒரு பதிவரின் கருத்தை முன்வைக்கிறேன்:
நல்ல படைப்புகள் பற்றிய  அறிமுகங்களில் இரண்டுவகை உண்டு.
“அறிமுகப்படுத்தி உயர் பிம்பம் அடைதல்.
பிரபலம் என்கிற பெரும் பிம்பம் கிடைத்தபின் நல்ல விஷயம் என நாம் நம்புகிறவற்றை பிராபல்யத்தைப் பயன்படுத்தி வெகுஜனங்களிடம் அறிமுகப்படுத்துதல்.
பின்னதன் முற்றமுழுமுதல் உதாரணம் சுஜாதா. அவரது வடிவ பங்களிப்பு போலவே இலக்கிய அறிமுகப் பங்களிப்பும் அபாரமானது. இலக்கியவாதிகளின் பெயர்களை குமுதத்தில் ‘உதிர்த்ததால்’ அவருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏகப்பட்ட இளைஞர்களுக்கு பிரயோஜனம். இன்னும் சொல்லப்போனால் இதில் சுஜாதாவுக்கு நஷ்டம் என்று கூட சொல்லலாம்.
சுஜாதா மூலம் கிடைத்த அறிமுகத்தால் தீவிர இலக்கிய வாசிப்பிற்கு வந்து சுஜாதாவைத் தாண்டிப் போனவர்கள் கனிசமானோர் எனலாம். அதைப் பற்றி அறியாதவர் அல்லர் என்பது மட்டுமின்றி அதைப்பற்றி கவலைப்படாதவராகவும் அவர் இருந்தார்.”
மேற்கண்ட பதிவை எழுதியதும் மாமல்லனே. ஆக, சுஜாதா இலக்கியத் தொண்டாற்றினார், தேநீர் ஆற்றினார் என்றெல்லாம் குஞ்சுகள் சொல்வது இருக்கட்டும். பெரிசே அதைத்தானே சொல்லியிருக்கிறது.  ஆனால், 20.10.2010ல் அபாரமான இலக்கிய அறிமுகப் பங்களிப்பு செய்த சுஜாதா, 20.01.2012ல் வேலியோரம் லேபிள் ஒட்டப் போய் விடுவதன் மர்மம்தான் புரியவில்லை. ஒரு வேளை இணைய இலக்கிய மும்மூர்த்திகள் மேலிருக்கும் கடுப்புதான் சுஜாதா மேல் பொசிகிறதோ, என்னவோ.
எழுத்தாளப் பெரிசுகள் நாக்கைப் புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொள்ளட்டும். சுஜாதாவே எழுதியிருக்கிறார்: க.நா.சு எப்படி டில்லியில் முகத்தைத் திருப்பிக் கொண்டார்; சுரா நாகர்கோவிலில் எப்படிப் புறக்கணித்தார் என்று. இந்தப் பெரிசுகளிடம் இருந்த/இருக்கும் பொறாமையோ, காழ்ப்புணர்ச்சியோ, வியாபாரத் தந்திரங்களோ கிடையாது வாசகக் குஞ்சுகளுக்கு. தான் கண்டுபிடித்த எழுத்தாளர்களையும், படைப்புகளையும் – அது Bill Bryson-ஆக இருக்கலாம்; ஜெமினி ஸ்டுடியோ காண்டீன் சமையற்காராக இருக்கலாம் – அறிமுகம் செய்து வைத்த சுஜாதாவின் நோக்கங்களிலும், எழுத்துக்களிலும் இந்தக் குஞ்சுகள் ஒரு குழந்தையின் தேடலையும், தேடியதை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டு, பிற படைப்பாளிகளை மனதார பாராட்டும் பண்பையும் கண்டார்கள். அதனால்தான் சுஜாதாவை ஒரு தலைமுறையே தன் காலம் முழுவதும் போற்றிக் கொண்டிருக்கிறது. 
இனிமேல் மும்மூர்த்திகளின் அறிமுகப் பங்களிப்பையும் பார்த்து விடலாம்.
பைபிளில் பவுல் இப்படியாக எழுதுகிறார்:
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
நமது மும்மூர்த்திகள் உயர் பிம்பம் அடைவதற்காக அறிமுகம் செய்திருக்கலாம். “உன் முதுகை நான் சொறிகிறேன், என் முதுகை நீ சொறி” என்று திட்டம் தீட்டி அறிமுகம் செய்திருக்கலாம். இன்னொருவரைப் புறக்கணிக்கின்ற அரசியல் முயற்சியாக மற்றொருவரை அறிமுகம் செய்திருக்கலாம். படைப்பை வாசிக்காமலேயே, இணையத்தில் டௌன்லோடு செய்து எழுதியிருக்கலாம். உள்ளீடற்ற, சொந்த அனுபவமற்ற அறிமுகங்களைச் செய்திருக்கலாம். சுயபுராணம் பாடுவதற்காக அறிமுகம் செய்திருக்கலாம். உண்மையாகவே ஒரு படைப்பாளியாலோ, படைப்பாலோ கவரப்பட்டு அறிமுகம் செய்திருக்கலாம். எப்படியானால் என்ன? இவர்கள் மூலமாக படைப்புகளும், படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.
எஸ். ராமகிருஷ்ணனின் சிந்தனையும், புனைவும் எனக்கு உவப்பளிக்காததால், அவரை நான் அதிகமாகப் படிப்பதில்லை.  ஆனால், சாரு நிவேதிதாவையும், ஜெயமோகனையும் இணையத்திலும், பதிப்பிலும் படித்து வருகிறேன். இருவரின் படைப்புகள் மீதும், இயங்குமுறைகள் மீதும் எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. ஆனால், இருவரும் கணிசமான அளவில் படைப்புகளையும், படைப்பாளிகளையும் அறிமுகம் செய்து வைப்பவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. சாரு நிவேதிதா ஒரு காலத்தில் இந்த அறிமுகங்களைத் தீவிரமாக செய்து கொண்டிருந்தார். நபக்கோவ், யோசா, காபிரியல் கார்சியா மார்க்வெஸ், ப. சிங்காரம் என்று அவர் எழுதியதால் தமிழ் வாசகப் பரப்பிற்கு பரிட்சயமான எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஜெயமோகன் மூலமாக எனக்குத் தெரிய வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வைக்கம் மொகமது பஷீர்,
பால் சக்கரியா, கண்மணி குணசேகரன் முதலியோர். விஷ்ணுபுரம் வாசக வட்ட விருது மூலம் தெரிய வந்த அ. மாதவனை இன்னும் படிக்கவில்லை. ஆனால், ஆர்வமாக இருக்கிறேன்.
இந்த அறிமுகங்களெல்லாம் வாசகன் முதுகில் சுமையை ஏற்றுகின்றன; அவன் கண்களை குருடாக்குகின்றன; தங்களை முன்னிருத்தி இலக்கியத்தைப் பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதெல்லாம் மாமல்லனின் வரட்டு வாதமாகத்தான் படுகிறது. சாருவோ, ஜெயமோகனோ, ஏன் சுஜாதாவே கூட அறிமுகப்படுத்தினார் என்பதற்காகவே ஒரு படைப்பு மேன்மையடைவதுமில்லை; இவர்கள் அறிமுகப்படுத்தாதவை என்பதனால் மட்டுமே தோல்வியடைவதுமில்லை. இன்றைக்கு சாருவும், ஜெயமோகனும் உயர்வாகப் பேசும் எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகள் தனிப்பட்ட வகையில் எனக்கு ஏமாற்றமளிக்கும் படைப்புகளே.
“புல்லுக்குப் பொசிகிறதே” என்று எந்த விவசாயியும் கவலைப்படுவதில்லை. இயற்கையின் நியதி அதுதான் என்பது அவனுக்குத் தெரியும். நெல்லுக்கு நீர் போய்ச் சேருகிறதா என்பதில்தான் அவன் கவனம் இருக்கும். ஆனால் “புல்லுக்குப் பொசிகிறதே” என்ற பொருமலிலேயே மாமல்லனின் காலம் விரையமாவதாகத் தோன்றுகிறது. தி. ஜானகிராமனுடன் சாரு நிவேதிதா பேசியிருப்பாரா போன்ற புலனாய்வுகளில் புளங்காகிதம் எய்துவதை விட்டு விட்டு “எக்ஸைல்” நாவலுக்கு எழுதியது போன்று சாரமான விமர்சனங்களை அவர் தொடர்ந்து எழுதினால் என்னைப் போன்ற குஞ்சுகளுக்கு உபகாரமாக இருக்கும்.