ஜெயமோகன்
எழுதிய ‘ரப்பர்’ நாவலை சமீபத்தில் வாசித்தேன். இந்த நாவலைப் பற்றி பல ஆண்டுகளாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதுதான் நாவல் என்ற கலை வடிவத்தில் முழுமை அமைந்த முதல் தமிழ் படைப்பு என்பது போல ஜெயமோகன்
பேசி, அது சர்ச்சைக்குள்ளானதாக ஜெயமோகனே அவர் தளத்தில் எழுதியதை வாசித்திருக்கிறேன்.
மேலும், இது அவரது முதல் நாவல் என்பதையும் அறிந்திருந்தேன், அவரது பிந்தைய நாவல்களான
காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி முதலிய நாவல்களையும், பல சிறுகதைத் தொகுப்புகளையும்,
புனைவல்லாத படைப்புகளையும் வாசித்து, அவற்றில் பலவற்றை சிறப்பாகக் கருதி வருவதால்,
அவரது முதலாவது நாவலை வாசிக்க ஆர்வம் கொண்டிருந்தேன். நாவல் எழுதப்பட்டு 20 ஆண்டுகளுக்கு
மேலாகிவிட்ட நிலையில் அதைக் குறித்து பிறர் எழுதிய விமர்சனங்களும், பிற கருத்துக்களும்
இணையத்தில் இருக்குமென்பதால், நாவலை வாசித்து முடித்த கையோடு அவற்றையும் தேடி வாசித்தேன்.
எனவே, இந்த விமர்சனம் நாவலைப் பற்றியது மட்டுமல்ல, சில விமர்சனங்களின் மீதும்.
‘ரப்பர்’
நான் வாசித்த ஜெயமோகன் நாவல்களுக்குள்ளேயே வாசித்த எளிதான நாவல். சில மணிநேரங்களுக்குள்ளேயே
வாசித்து முடித்து விட்டேன். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இது ஆரம்ப நிலை வாசகர்களைக்
கவரும் வண்ணம், எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது. நாவலில் பயன்படுத்தப்படும் வட்டார
வழக்கு தெரியாதவர்களை கொஞ்சம் பயமுறுத்தலாம். மற்றபடி, எளிய நடை; எளிய தத்துவ அணுகுமுறை;
வெளிப்படையான, சற்று அதீதமான உணர்ச்சித் தெறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கதை
சொல்லப்பட்டுள்ளது. நாவலின் நீளம் குறை. இது ஒரு போட்டிக்காக எழுதப்பட்டிருக்கிறது.
அந்தப் போட்டியின் விதிப்படி 200 பக்கங்கள்தான் எழுதலாம். எனவே, 290 பக்கங்களாக எழுதப்பட்டதில்
மூன்றிலொரு பங்கு வெட்டப்பட்டிருக்கிறது. பின்னர் சேர்க்கப்படவில்லை. நாவலை வாசிக்கும்
போது அந்த வெட்டுத் தழும்புகள் ஆங்காங்கே புலப்படுகின்றன. கதையில் வரும் சில கதாபாத்திரங்களும்,
சம்பவங்களும் தேவைப்படும் அளவிற்கு விரிவாக சொல்லப்படவில்லை. உதாரணம், தங்கம் என்ற
கதாபாத்திரமும், அவளது வாழ்வும்.
நாவலில்
ஜெயமோகன் பயன்படுத்தும் நடை அவர் பின்னர் பயன்படுத்திய நடையை விட கச்சிதமாக இருக்கிறது.
ஆங்காங்கே சுஜாதா வந்து எட்டிப்பார்ப்பதாகத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு:
“உள்ளிருந்து
ஒரு பெண் தட்டில் காப்பியுடன் வந்தாள். பாவாடை தாவணி அணிந்திருந்தாள். முகமும் கழுத்தும்
வெளிறிய வெண்ணிறத்தில், மெல்லிய தேமல்களுடன் இருந்தன. ஆரோக்கியமின்மை அவள் உடலெங்கும்
தெரிந்தது. கண்கள் மட்டும் பெரிதாக, பிரகாசமாய், தயக்கத்தையும் சட்டென்று புண்படக்கூடிய
ஆவலையும் காட்டக் கூடியனவாய் இருந்தன. காபியை வைத்த போது அவள் பார்வை ராமின் கண்களைத்
தொட்டு விலகியது.”
ஜெயமோகனின்
படைப்புகளில் பத, தர வேறுபாடுகள் எப்போதுமே அதிகமாக இருக்கும். காடு, ஏழாம் உலகம் முதலிய
தரமிக்க நாவல்களைப் படைத்தவரா கன்னியாகுமரி என்ற நாவலையும் எழுதினார் என்று வியக்க
வைப்பார். சிந்தனையிலும், மொழியிலும் பல படைப்புகளில் உச்சத்தைத் தொடும் அவர் சில படைப்புகளில்,
சிந்தனையிலும், மொழியிலும் பாமரத்தனத்தை வெளிப்படுத்தி பாதாளத்தைத் தொடுதுவதும் உண்டு.
சமயங்களில் ஒரே படைப்புக்குள்ளும் இந்த வேறுபாடுகளைக் காணலாம். “ரப்பர்” நாவலிலும்
இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:
“பிரான்ஸிஸ்
சட்டென்று புல்லரித்தான். எத்தனை அற்புதமான வரிகள்! இவை ஏன் இதுவரை புரியவில்லை? திரும்பத்
திரும்பக் கேட்டும் என் மனசைத் தாக்கவில்லை? ஒவ்வொன்றுக்கும் ஒரு மனோபாவம் வேண்டுமா?
ஒரு சந்தர்ப்பம், ஒரு காலம் வர வேண்டுமா? அந்த
வார்த்தைகளைப் பலமுறை மனசுக்குள் திரும்பத் திரும்பக் கூறினான். சொல்லச் சொல்ல அவை
மந்திரம் போல அவனுள் விரிந்தன. புதுப் புது அர்த்தங்களுடன் வளர்ந்தன. ஆகாயத்துப் பறவைகள்!
ஆகாயத்தில் ஒரு பறவை.”
ரமணிச்சந்திரன்
எழுதுவது போலிருக்கிறது மேற்கண்டது. அதிலும் “ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை”
ரொம்ப சூப்பர். அப்போதே மணிரத்னம் படத்திற்கு வசனம் எழுதத் தயாராகி இருந்திருக்கிறார்
ஜெயமோகன்.
===
“ரப்பர்”
மீதான விமர்சனங்களைக் கண்ட போது என் கவனத்தை ஈர்த்தது பெரும்பாலோர் இதை ஒரு சூழியல்
நாவலாக சித்தரித்திருப்பது. காடுகளை, அல்லது வாழைத் தோட்டங்களை அழித்து ரப்பர் மரங்களை
நட்டது சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தியுள்ளது; அதை எதிர்த்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார்
என்று பலர் சிலாகித்திருக்கிறார்கள் (உதாரணத்திற்கு சிலிக்கான் ஷெல்ஃப் என்ற தளத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ள அரை வேக்காட்டு விமர்சனத்தைக் குறிப்பிடலாம்). “ரப்பர்” என்று
தலைப்பைச் சூட்டப்பட்டுள்ள 175 பக்க நாவலில் ரப்பரின் தீமைகள் சொல்லப்படுவதும், அதை
எதிர்க்கும் இயக்கம் பற்றி குறிப்பிடப்படுவதும் மொத்தமாக நான்கு பக்கங்களைத் தாண்டாது.
“ரப்பர்”
சூழியல் நாவல் இல்லையெனில் வேறென்ன? நூலிலேயே அது சமூக நாவல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதுதான் சரியும் கூட. “ரப்பர்” என்பது இந்த நாவலில் ஒரு உபகரணம்தான். நாவலின் அடிநாதம்
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரபலம் பெற்றெழுந்த
நாடார்களின், குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சமூக வரலாறுதான். நாடார்களின் எழுச்சி,
பல இடை, உயர் நிலைச் சாதிக்காரர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தில் நடந்தது. அதில்
நாயர் சாதிக்காரர்களின் சமூக வரலாற்றையும் “ரப்பர்” ஓரளவுக்குத் தொடுகிறது.
“பண்புடன்”
என்ற மின்னிதழில் “வன்மம் தோய்ந்த வசை” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள மதிப்புரை கிறிஸ்தவ
நாடார்களின் சாதி, மத வரலாற்றை “ரப்பர்” காழ்ப்புடன் சொல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறது.
சுட்டிக் காட்டப்பட்ட பல குறைகளுக்கு நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னைப்
பொறுத்தவரை ஜெயமோகன் தான் எழுத வந்த விஷயத்தைப் பற்றி பெரிதாக ஆய்வோ, உழைப்போ செய்ததாகத்
தோன்றவில்லை.
“பண்புடன்”
இதழில் விமர்சனம் எழுதியவர் நாவலில் பாஸ்டராகக் குறிப்பிடப்படும் ‘ஜோசப் ராஜேந்திரன்’
உண்மையில் பாதிரியார்தான். ப்ரோட்டஸ்டாண்டு பாஸ்டருக்கும், கத்தோலிக்க பாதிரியாருக்கும்
வேறுபாடு தெரியாமல் ஜெயமோகன் குழப்புகிறார் என்கிறார். நுட்பமாக வாசித்தால் நாவலின்
மையமாக இருக்கும் பெருவட்டர் குடும்பம் ப்ரோட்டஸ்டாண்டு பிரிவைப் பின்பற்றும் குடும்பம்
என்பது புலப்படும். ‘ஜோசப் ராஜேந்திரன்’ குறித்த வர்ணனையிலேயே அவர் ப்ரோட்டஸ்டாண்டு
பாஸ்டர்தான் என்று துலங்கி விடுகிறது. ஏனென்றால், கத்தோலிக்க பாதிரிமார்கள் தங்கச்
சங்கிலி அணிவது வழக்கமில்லை. அதே நேரத்தில் பெருவட்டர் குடும்பத்தைச் சேர்ந்த “திரேஸ்,”
“பிரான்சிஸ்” போன்ற பெயர்கள் ப்ரோட்டஸ்டாண்டு குடும்பங்களில் வைக்கப்படுவது வெகு அபூர்வம்.
ஆக மொத்தம், தான் எழுத முன்வந்த ப்ரோட்டஸ்டாண்டு நாடார்கள் சமூகத்தைப் பற்றிய ஜெயமோகனின்
அறிவு மேலோட்டமானது என்றுதான் தோன்றுகிறது.
நாவல்
ப்ரோட்டஸ்டாண்டு நாடார்களை நான்கு தலைமுறைகளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க,
இடையிடையே நாயர்களைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. போதிய விபரமும், விவரிப்பும்
இல்லாததால்தான் இவற்றைக் குறிப்புகள் என்கிறேன். ஒரு வேளை, இவையெல்லாம் நாவலின் நீளத்தைக்
குறைக்கும் போது பலி கொடுக்கப்பட்டனவோ என்னவோ. தங்கம் என்னும் நாயர் பெண் நாவலின் முக்கிய
பாத்திரமாக காண்பிக்கப்படுகிறாள். செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து, அந்தக் குடும்பம்
சரிவைச் சந்தித்தபின் பெருவட்டர் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வருகிறாள். அவளுக்கும், பெருவட்டர்
வீட்டிலிருக்கும் திருமணமாகாத இளைஞனுக்கும் காம உறவிருக்கிறது. அவளுக்கு நாவலில் சொல்ல
எவ்வளவோ இருக்கலாம். ஆனால், அவள் ஒரு தடாகத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டு போய்
விடுகிறாள். ஜெயமோகன் படைப்புகளில் இளம் நாயர் பெண்களும், தடாகமும் சந்தித்தால் விபரீதம்தான்
விளைகின்றது என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டபடியால் இந்தச் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல்
ஆயாசத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
நாவலின் போக்கில் பல தருணங்களில் நாடகத்தனத்தைப்
பார்க்க முடிகிறது. முடிவு கூட சினிமாவாகத்தான் இருக்கிறது. பிரான்சிஸ் திருந்துகிறான்.
ரப்பரின் தீமைகளை உணர்கிறான். சூழியல் இயக்கத்தில் இணைகிறான். தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில்
ஒருவரின் புறக்கணிக்க முடியாத படைப்பல்ல இது என்ற எண்ணம்தான் நாவலை முடிக்கும் போது
எழுகிறது.
பின்குறிப்பு:
நாவலைக் குறித்து இணையத்தில் தேடிய போது ஜெயமோகனின் படைப்புலகம் குறித்த இரு பதிவுகளைக்
கண்டேன். ஜெகத் என்பவர் கைமண் அளவு என்ற தனது வலைப்பூவில் பதிவு செய்தவை இவை. மிக விரிவாகவும்,
தெளிவாகவும் எழுதப்பட்ட விமர்சனங்கள் இவை. வேறு எவராவது ஜெயமோகன் படைப்புகள் பற்றி
இவ்வளவு சிறப்பாக விமர்சனங்களை எழுதியிருப்பார்களா என்று தோன்றுகிறது. ஏதோ காரணத்தால் இவர் தன் முயற்சியை நடுவிலேயே நிறுத்தி
விட்டார் என்பது துரதிர்ஷ்டம்.