டாக்டர்
காலின் கேம்பல் என்பவர் எழுதியுள்ள ஒரு புத்தகம் 5 இலட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றுள்ளது.
இது ஊட்டச்சத்து (nutrition) துறையில் ஒரு சாதனை என்கிறார்கள்.
அமெரிக்காவில்
அதிக அளவில் பால் உற்பத்தியாகும் விஸ்கான்சின் மாநிலத்தில் மாட்டுப் பண்ணை வைத்திருக்கும்
ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் கேம்பல். கால்நடை மருத்துவப் படிப்பில்
ஆர்வம் கொள்கிறார். ஆனால் அந்த ஆர்வம் ஊட்டச் சத்துத் துறைக்கு மாறுகிறது. கோர்னல்
பல்கலைக்கழகத்தில் ஊட்டச் சத்துத் துறையில் முனைவர் பட்டம் பெறுகிறார்.
முனைவர்
பட்டம் முடித்த பின்னர் அவருக்கு ஒரு பணி வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊட்டச்சத்து
ஆய்வு தொடர்பானது அது. அந்த நாட்டில் புரதச் சத்து உண்ணுவதை அதிகரிக்கும் நோக்கத்தில்
வேர்க்கடலை உண்ணுவது ஊக்குவிக்கப்படுகிறது. வேர்க்கடலை உண்ணுவது அதிகரிக்கிறது. கூடவே,
கல்லீரல் புற்றுநோயும் அதிகரிக்கிறது. இரண்டிற்கும் தொடர்பிருக்க வாய்ப்புகள் உண்டு.
வேர்க்கடலையைப் பாதிக்கும் ஒரு பூஞ்சைக் காளான் உற்பத்தி செய்யும் அஃப்லோடாக்சின் எனும்
வகை நச்சு, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. எனவே, இது தொடர்ப்பாக ஆய்வு செய்ய
டாக்டர் கேம்பல் அழைக்கப்படுகிறார்.
டாக்டர்
கேம்பல் பிலிப்பைன்ஸில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களைப் பார்க்கிறார். அவருக்கு
ஒன்று புலனாகிறது. கல்லீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைக் குடும்பத்துக்
குழந்தைகளை விட, வசதியான குடும்பத்துக் குழந்தைகளே.
இதைப்
பற்றி சிந்திக்கும் போது, அவருக்கு தான் ஏற்கனவே வாசித்த ஒரு ஆய்வுக் கட்டுரை நினைவுக்கு
வருகிறது. அந்த ஆய்வு இந்தியாவில், பஞ்சாபில் நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் எலிகளுக்கு
பூஞ்சைக் காளான் நச்சை உணவில் சேர்த்துக் கொடுக்கிறார்கள். பிறகு எலிகள் இரண்டு குழுக்களாக
பிரிக்கப்படுகின்றன. ஒரு குழுவிற்கு குறைந்த புரதச் சத்துள்ள உணவு. மற்றொன்றிற்கு அதிக
புரதச் சத்துள்ள உணவு. அதிகப் புரதச் சத்து உட்கொண்ட எலிகள் அத்தனையும் கல்லீரல் புற்று
நோயால் செத்து விடுகின்றன. குறைந்த புரதம் உட்கொண்ட எலிகள் எவையும் சாகவே இல்லை. இந்த
ஆய்வு வெளியான காலத்தில் சர்ச்சைக்குள்ளான ஒன்று. துறை வல்லுநர்கள் அனைவரும் அதிகப்
புரதம் கொண்ட எலிகளே புற்றுநோயை வலுவாக எதிர்த்திருக்கும் என்று நம்பினார்கள். இந்திய
ஆய்வாளர்கள் ஆய்வில் தவறிழைத்து விட்டதாக பரவலாக சொல்லப்பட்டது.
டாக்டர்
கேம்பலுக்கு பிலிப்பைன்ஸ் புள்ளிவிபரம் பார்த்த பிறகு. இந்திய ஆய்வு சரியானதாகவே படுகிறது.
மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார். இந்திய ஆய்வில், புரதச் சத்து எதிலிருந்து பெறப்பட்டதென்று
பார்க்கிறார். அது கேசின் என்ற பொருளிலிருந்து
பெறப்பட்டது. கேசின், வே என்பன பசுவின் பாலின் இரு பிரதான புரதங்கள். எனவே, அஃப்லோடாக்சின்
நச்சு உட்கொண்ட உயிரினங்கள் கேசின் உட்கொள்ளும் போது புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறதா
என்று ஆராயத் தொடங்குகிறார். அதிகரிக்கிறது என்பதையும், இன்னும் பல, தொடர்பான கண்டுபிடிப்புகளையும்
செய்கிறார்.
இதற்கிடையில்
சீனாவில் ஒரு பெரிய அளவிலான கள ஆய்வில் ஈடுபடுகிறார். சீன மக்களின் உணவுப் பழக்கங்களும்,
அவர்களுக்கு வரக்கூடிய நோய்களையும் குறித்த பல்லாண்டு காலக்கட்டத்தில், பல்லாயிரம்
மக்களிடம் சர்வே எடுத்து செய்யப்பட்ட ஒரு ஆய்வு. அந்த ஆய்வின் முடிவுதான் “The
China Study: The Most Comprehensive Study of Nutrition Ever Conducted And the
Startling Implications for Diet, Weight Loss, And Long-term Health” என்ற ஐந்து லட்சம்
பிரதிகள் விற்ற புத்தகம்.