Sunday, February 6, 2011

மைனாவும் மத்தகமும்

என் வாகன சிடி பிளேயரில் ஒரு சிடி போட்டால் அதை மாற்ற இரண்டு மாதங்கள் எடுக்கும். கேட்டதையே திருப்பத் திருப்பக் கேட்டுக் கொண்டிருப்பேன். இரண்டு மூன்று தடவைக்குப் பிறகு பிடித்த பாடல்களை மட்டும் மறுபடியும் மறுபடியும் பல முறை. அப்படிக் கடந்த வாரம் கேட்டவை மைனா படத்தின் பாடல்கள். இந்த வெற்றிப் படத்தின் எல்லா பாடல்களுமே ரசிக்கத் தகுந்தவைதான். நான் மிகவும் விரும்பிய பாடல்கள் இரண்டு:

1. மைனா..மைனா
2. கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்

ஏன் ரசித்தேன் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு இசையறிவு கிடையாது. ஆனால் மறுபடி மறுபடி கேட்டு ரசித்தேன். அது போன்றே, மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த ஒரு பழைய பாடல்: "சாமக்கோழி ஏய் கூவுதம்மா" (பொண்ணு ஊருக்கு புதுசு என்ற படத்தில் உள்ளதாம். யூ-ட்யூபில் பார்த்தேன். ரசனை இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது இந்த அருமையான பாடல். சரிதா ஒரு லெக்ஹோர்ன் கோழியின் லாவகத்துடன் நடனமாடுகிறார். வெட்கப்படுவதும் , காமவயமானது போன்ற முகபாவனை கொடுக்கவும் அவரால் முடியவில்லை. படாத பாடுபடுகிறார். சுரேஷ் ஒரு கோழி தூவலை வைத்துக் கொண்டு விசிறிக் கொண்டிருக்கிறார். இரண்டு பேரும் ரொம்ப இன்டிமேட் ஆக இருக்கிறார்கள் என்று டைரக்டர் காட்ட முனைகிறார் (ஒரு வேளை உடலுறவாகக் கூட இருக்கலாம்). ஆனால் பார்க்க ஏதோ ஒருத்தர் மற்றவரிடம் பாவ மன்னிப்பு கேட்பது போல் இருக்கிறது.

கடந்த வாரத்தில் வாசித்தவற்றில் சிறப்பானது ஜெயமோகன் எழுதிய மத்தகம் என்ற ஒரு நீள்கதை. அவருடைய "ஊமைச் செந்நாய்" என்ற கதைத் தொகுப்பில் உள்ளது (உயிர்மை பதிப்பகம்). திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கதை நடக்கிறது. திருவட்டார் கோவில் யானையான கேசவனுக்கு மூன்று பாகர்கள். அவர்களில் ஒருவன் சொல்வது போல் கதை எழுதப்பட்டுள்ளது. யானைக்குள் ஒரு தெய்வம் இருக்கிறது. மனிதருக்குள் ஒரு மிருகம் இருக்கிறது. மூவருக்குமிடையில் சதா நடைபெறும் யுத்தம்தான் மத்தகம். இதைச் சொல்ல திருவிதாங்கூர் மண்டலத்தின் வரலாறு, புவியியல், கலாச்சாரம் என்று பல வெளிகளிலும் அனாயசமாகப் புகுந்து ஒரு யானையின் கம்பீரத்துடன் உலா வருகிறார் ஜெயமோகன். கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு, எதிர்பாராத திருப்பங்களுடன், ஒரு வாக்கியத்தின், ஏன் ஒரு சொல்லின் பிரயேகம் கூட அலுக்க வைக்காத நடையில் எழுதப் பட்டுள்ள ஒரு படைப்பு இது.

இந்தக் கதையைப் படிப்பவர்களுக்கு சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஜெயமோகன் மேல் வைக்கும் பிரதான விமர்சனம் தவறானது என்பது விளங்கும். அந்த விமர்சனம் ஜெயமோகனின் எழுத்துக்கள் அறம், ஒழுங்கு ஆகியவற்றை முன்னிறுத்தி மனிதனின் மேல் வன்முறையைத் திணிப்பவை என்பது. "மத்தகம்" ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை ஆவணப்படுத்துவது போல் சொல்கிறதே தவிர, எந்த ஒரு நிலைப்பாட்டையும், செயலையும் நியாயப்படுத்துவதில்லை. அறம், ஒழுங்கு ஆகியவற்றை கதையின் எல்லாப் பாத்திரங்களும் மீறுகிறார்கள். சில சமயங்கள் அதற்கான பதில் வினையைப் பெறாமலே தப்பித்துக் கொள்கிறார்கள். இதுதான் கதையின் முடிவும். வாழ்வின் உண்மையும் கூட இதுதான் அல்லவா?

Friday, February 4, 2011

விவஸ்தை இல்லாத இந்துவும் ராசா கைதும்

பிப்ரவரி 3 2011 தலையங்கத்தில் "Significance of Raja's arrest" என்ற தலைப்பின் கீழ் தி இந்து பத்திரிகை ராசாவைக் கைது செய்ததது மட்டும் போதாது பிரதமரையும், சோனியாவையும் கூட விசாரிக்க வேண்டும் என்ற ரீதியில் எழுதியிருக்கிறது. நியாயமான விஷயம்தான். ஆனால் யார் இதை எழுதுவது என்ற விவஸ்தை வேண்டாமா? ராசா விவகாரம் புகைந்து கொண்டிருந்த சமயத்தில், அதை பூசிப் மெழுக முயன்றது இந்த இந்துதான். எனவே தலையங்கத்திற்கு பின்னூட்டமாக கீழ்க்கண்டதை எழுதினேன். எதிர் பார்த்தவாறே அவர்கள் அதை பிரசுரிக்கவில்லை. அதனால் என்ன? நம் தபாலில் பிரசுரித்து விடுவோம். நாலு பேருக்கு தெரிய வேண்டும் அல்லவா? (I mean literally four people)

The editorial is eloquent and full of righteousness, but it needs to be contrasted with the interview you published on May 22, 2010 (http://www.thehindu.com/opinion/interview/article435348.ece). That interview was nothing but an opportunity provided to the corrupt minister on a golden platter to portray and promote himself as a pure saint. No hard questions asked, no claims challenged. The interview became the material for DK's Veeramani to absolve Raja from all allegations. Now that the ex-minister stands exposed, The Hindu tries to wear the mask of a holy saint. Shame on you. Most likely you won't publish this comment, but I hope you have a conscience and will try to regain your journalistic ethics.